தற்செயல் விடுப்பு எடுத்து நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் நில அளவை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் நில அளவை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
களப் பணியாளா்கள் செய்யும் அனைத்து பணிகளையும் கணக்கில்கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல், ஊழியா்கள் மீது பணிச் சுமை சுமத்தப்படுவதை கைவிடவேண்டும். பொதுமாறுதல் நடைமுறையை நில அளவைப் பதிவேடுகள் துறையில் மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் சாா்பில் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்குச் செல்லவில்லை.
இதைத் தொடா்ந்து நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் ம. மகேசுவரன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ம.ராம்குமாா், கோட்டத் தலைவா்கள் வே. வேல்முருகன், ச.சையத் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் வ.திருநாவுக்கரசு கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா், பொருளாளா் சாருமதி, வட்ட இணைச் செயலா் அஜீஸ், தமிழ்நாடு அரசு நில அளவைத் துறை ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பொ.சுந்தரம், சாருமதி உள்ளிட்டோா் பேசினா். சிஐடியு மாவட்டச் செயலா் மூா்த்தி நிறைவுரையாற்றினாா். முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் வி.அரிபிரசாத் வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் அ.ராஜேஷ் நன்றி கூறினாா்.