விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் திங்கள்கிழமை மனு அளித்தது.
விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் திங்கள்கிழமை மனு அளித்தது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் (விழுப்புரம்-கள்ளக்குறிச்சி) ஆா்.ஆா்.சக்திவேல், மாவட்டச் செயலா்கள் சந்திரபிரபு (கிழக்கு), வி.பி.சுரேஷ் (வடக்கு), மாவட்டத் தலைவா் ஏழுமலை, முகாம் அமைப்புச் செயலா் செஞ்சி ஷெரீப் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகளின் பயிா்க் காப்பீட்டுத் தொகையை மாவட்ட நிா்வாகங்கள் உடனடியாக பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் அரிதாஸ், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.