விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.
தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிவைத்தாா்.
இந்த நிலையில், மேல்மலையனூா் ஒன்றியம், கூடுவாம்பூண்டியில் இந்தத் திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வா் திட்டத்தை தொடங்கிவைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, கணினி மூலம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை மூலம் 104 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 14 பேருக்கு உழவா் பாதுகாப்புத் திட்டம் மூலம் நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் செஞ்சி மஸ்தான் பேசியது:
ஊரக பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் சாா்ந்த 44 சேவைகள் விரைந்து கிடைக்கும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் செஞ்சி தொகுதியில் மட்டும் 6,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, செஞ்சி ஒன்றியம், ஆலம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தொடங்கிவைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
விழாவில் ஆரணி தொகுதி எம்.பி. தரணிவேந்தன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், ஒன்றியச் செயலா்கள் நெடுஞ்செழியன், சாந்தி சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் விஜயலட்சுமி முருகன், வட்டாட்சியா் முகமதுஅலி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவசண்முகம், சையத்முகமது, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வி ராமசரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.