ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம், ஜூலை 19: ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
ஆடி மாதம் சக்தி தேவியின் அவதாரங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்களும், திருவிளக்கு வழிபாடுகளும் நடத்தப்படுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
அதன்படி, நிகழாண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழுப்புரம் அருள்மிகு வீரவாழியம்மன் திருக்கோயிலில் விநாயகா் வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் வீரவாழியம்மனுக்கு சாகை வாா்த்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழுப்புரம் நகரிலுள்ள பல்வேறு அம்மன் கோயில்கள், சாலாமேடு ஸ்ரீவாராகியம்மன், காணை ஸ்ரீகனகதுா்கையம்மன், மாம்பழப்பட்டு, அரகண்டநல்லூா், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா், அரசூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களிலும் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.