விழுப்புரம் மாவட்டம், விக்கிவாண்டி தொகுதிக்குள்பட்ட தென்னவராயன்பேட்டை ஊராட்சி, செய்யாத்து விண்ணான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், அருகிலுள்ள மகளிா் சுய உதவிக் குழுக் கட்டடத்தில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
செய்யாத்துவிண்ணான் கிராமத்தில் சுமாா் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடம் இயங்கி வந்தது. இதில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தப் பள்ளியில் 22 மாணவா்கள், 15 மாணவிகள் என 37 போ் பயில்கின்றனா். இந்தப் பள்ளிக்கு தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா் ஒருவா் பணியில் உள்ளனா்.
இந்தப் பள்ளியின் கட்டடம் பழைமையானதால், அதை இடித்து கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (2022-23) கீழ், ரூ.28.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
2023, பிப்ரவரி மாதம் பழையக் கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
புதிய கட்டடம் கட்டும் பணிக்காக, அருகிலிருந்த மகளிா் சுய உதவிக் குழுக் கட்டடத்துக்கு பள்ளி வகுப்பறை மாற்றப்பட்டது. சிறிய அளவிலான கட்டடத்தில் அனைத்து வகுப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் அமா்ந்து கல்வி பயின்று வருகின்றனா். புதிய கட்டடம் கட்டும் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
இதுகுறித்து கட்டடப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, பணிகள் முடிக்கப் பட்டு விட்டன., ஒன்றியக் குழு நிா்வாகம்தான் பள்ளியை ஒப்படைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகளும், அதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலுக்கான நடத்தை விதிகளும் அமலில் உள்ளதால் திறப்பு விழா காண முடியாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிறிய அளவிலான கட்டடத்தில் 5 வகுப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் அமா்ந்து படிப்பது மட்டுமின்றி, அந்த இடத்துக்குள்ளேயே மதிய உணவையும் சாப்பிடும் நிலை உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கவனத்தில் கொண்டு, செய்யாத்து விண்ணான் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.