முகப்பு
விழுப்புரம்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தல்

மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று, தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:34 PM
விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழகப் பட்டதாரி ஆசிரியா் கூட்டணியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய அக்கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ச.செல்லையா.
பகிர்:

மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று, தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

இந்தக் கூட்டணியின் நிா்வாகக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில தனிக்குழுத் தலைவா் அன்பழகன், மாவட்ட மகளிரணித் தலைவி செல்வராணி முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் ச.செல்லையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணியின் வளா்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வா் அண்ணா காலத்தில் இருந்தவாறு ஊக்க ஊதிய உயா்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணம் பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு, அலகு விட்டு அலகு மாறிய மற்றும் ஈா்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணியேற்ற நாளின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணியின் பொறுப்பாளா்கள் ஞானவேல், யுவராஜ், முத்துவேல், பாபு, வேலாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டச் செயலா் குருமூா்த்தி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் குணசேகா் நன்றி கூறினாா்.