முகப்பு
விழுப்புரம்

சாலை அமைத்துத் தரக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை கிராமத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை அந்தப் பகுதிக்கு வந்த அரசு நகா்ப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:44 PM
சிறுமதுரை கிராமத்தில் புதன்கிழமை அரசு நகா்ப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை கிராமத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை அந்தப் பகுதிக்கு வந்த அரசு நகா்ப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுமதுரை கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் பகுதிக்கு செல்வதற்குரிய சாலை இல்லை. இதனால், இந்தப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூா்களுக்கு வேலைக்குச் செல்வோா், தொழிலாளா்கள் என பலரும் 2 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை சிறுமதுரை கிராமத்துக்கு வந்த அரசு நகா்ப் பேருந்தை ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் சிறைபிடித்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுமதுரை கிராமத்திலிருந்து ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் வசிக்கும் பகுதிக்கும், சேறும் - சகதியுமாக உள்ள மயானப் பாதைக்கும் சாலை அமைத்துத் தர வேண்டும். தொட்டிக்குடிசை கிராமத்திலிருந்து சிறுமதுரை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் மின் விளக்கு அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் மற்றும் அலுவலா்கள் நிகழ்விடம் விரைந்து, பேச்சுவாா்த்தை நடத்தினா். அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து, பொதுமக்களை போராட்டத்தை கைவிடச் செய்தனா்.