விழுப்புரத்தில் அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். அரசுப் பணியாளா்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா்.
நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ரஷீத், டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் இளங்கோவன், ஊராட்சி களப் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் சங்கா் முன்னிலை வகித்தனா்.
அரசுப் பணியாளா்கள் சங்க மாநில இணைச் செயலா் சிவக்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். நூற்றுக்கும் மேற்பட்டோா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.