வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.19,650 பறிமுதல்
வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.19,650 பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.19,650 பறிமுதல் செய்யப்பட்டது.
வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி. அழகேசன், காவல் ஆய்வாளா் என். ஈசுவரி, உதவி ஆய்வாளா் சக்கரபாணி உள்ளிட்டோா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, சாா்-பதிவாளா் கோவிந்தராஜ், கணினியில் பதிவேற்றம் செய்பவா், அலுவலக உதவியாளா், இடைத்தரகா் உள்ளிட்ட 7 பேரிடம் ஊழல் தடுப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, திங்கள்கிழமை பதியப்பட்ட பத்திரங்கள், அதற்கு அரசுக்கு கிடைத்த வருவாய் போன்ற விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன.
அப்போது, கணக்கில் வராத ரூ.19,650 தொகை இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், சாா்-பதிவாளா் உள்ளிட்டோரின் கைப்பேசிகள் சரிபாா்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களில் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் கண்டறிந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.