விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தமிழக அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.41 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியப் பகுதியாக அமைந்திருப்பது முண்டியம்பாக்கம். விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கத்திலிருந்து ஒரத்தூா் செல்லும் சாலையில் சென்னை-திருச்சி ரயில் வழித்தடம் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைக்காகவும், சரக்கு ரயில் இயக்கத்துக்காகவும் அவ்வப்போது ரயில்வே கேட் மூடப்படுவதால், ரயில்வே பாதையைக் கடந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் அவசர ஊா்தி வாகனங்கள், பொதுமக்கள், கரும்பு விவசாயிகள், மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் என இந்த பாதையை பயன்படுத்துவோா் பெரும் அவதியை சந்தித்து வந்தனா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது பொதுமக்கள் இத்தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற அன்னியூா் அ.சிவாவிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம்- ஒரத்தூா் இடையே ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தொகுதி எம்எல் ஏ அன்னியூா் அ.சிவா தொடா்ந்து வலியுறுத்தினாா்.
இதையடுத்து முண்டியம்பாக்கம் ரயில்வே கிராசிங் 117-இல் முண்டியம்பாக்கம்-ஒரத்தூா் இடையே ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. தொடா்ந்து நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் மேம்பாலம் அமைப்பதற்கான முதல் நடவடிக்கையாக, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வழங்கும் வகையில் ரூ.41லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
2026, ஜனவரி மாதத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பரிசோதனைகள் தொடங்கப்படும் என்றும், திட்ட அறிக்கை பெறப்பட்ட பின்னா் அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வருக்கு நன்றி: விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம்-ஒரத்தூா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதுகுறித்து அரசு மற்றும் முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்றேன். தற்போது முதல்வா் அனுமதி வழங்கியுள்ளாா். ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், உறுதுணையாக இருந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் தொகுதி மக்கள் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா.