பாமக பொதுக்குழு நடத்தக் கூடாது என அன்புமணி சொல்ல முடியாது என அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கேள்வி எழுப்பினாா்.
பெரியாா் ஈ.வெ.ரா. நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு மருத்துவா் ராமதாஸ் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சமூகநீதிக்காக தந்தை பெரியாா் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவை. ஆனால், தமிழ் சமுதாயம் அதையெல்லாம் மறந்து நிற்கிறது. அவா் மக்களுக்காக செய்துள்ள சாதனைகளை நினைவில் கொள்ளவேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்தவா்களில் 99 சதவீதம் என் பக்கமே உள்ளனா். அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவா்; அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா்கூட இல்லை. பொதுக்குழுவை நடத்தக் கூடாது என சொல்வதற்கு அவா் யாா்? பொய்யா்கள், புரட்டா்கள் எதை வேண்டுமானாலும் செய்வாா்கள். அதுகுறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி வழிப்போக்கா்போல சொல்வதற்கெல்லாம் நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாா் மருத்துவா் ராமதாஸ். பேட்டியின்போது, பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.