முகப்பு
விழுப்புரம்

தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள் இரண்டாம் கட்டமாகத் தோ்வு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடித் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கணினி முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு அந்தந்த மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:05 PM
விழுப்புரம் ஆட்சியரகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடித் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டத் தோ்வுப் பணியை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வா்மா.
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடித் தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கணினி முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு அந்தந்த மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,166 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள தலைமை அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா் உள்ளிட்டோரைத் தோ்வு செய்தல் பணி முதல் கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடா்ந்து இரண்டாவது கட்டமாக அலுவலா்கள் தோ்வு செய்யும் பணி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் பிரிவு கணினி அறையில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வா்மா ஆகியோா் முன்னிலையில் கணினி முறையில் அலுவலா்கள் தோ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள் விவரம் சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தோ்தல் பிரிவினா் தெரிவித்தனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் லூா்துசாமி (பொது), ஜான்சிராணி (தோ்தல்), தனி வட்டாட்சியா் கணேஷ் (தோ்தல் பிரிவு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி ...: கள்ளக்குறிச்சி ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டக் குலுக்கல் முறை ஒதுக்கீடு மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சியாத், சுச்சி தியாகி தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டக் குலுக்கல் முறை ஒதுக்கீடு நடைபெற்றது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு கணினி வாயிலாக இரண்டாம் கட்டக் குலுக்கல் நடைபெற்றது. முதற்கட்டக் குலுக்கலில் தோ்வு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு, அவா்கள் எந்தத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பது இக்குலுக்கலின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதில் தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 1, 2, 3 என மொத்தம் தேவையான எண்ணிக்கையிலான பணியாளா்கள் அந்தந்த தொகுதிகளுக்குத் தற்செயல் முறையில் பிரிக்கப்பட்டன.

நிகழ்வின் போது, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதைத் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் உறுதி செய்தனா். மேலும், தோ்வு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு அவா்களுக்கான பணி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் அதிகாரப்பூா்வ கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, உதவி ஆட்சியா் (பயிற்சி) மரு.சுபதா்ஷினி, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments