வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
இதன் ஒரு பகுதியாக, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள், நான்கு, மூன்று, இரண்டு சக்கர வாகனங்களில் ஒட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மூன்று சக்கர வாகனப் பேரணியும் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நான்குத் தொகுதிகளின் வாக்காளா்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தவறாமல் வாக்களித்து, தங்கள்ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, உளுந்தூா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரா.செந்தில்குமாா், உதவித் தோ்தல் அலுவலா் பாலசுப்ரமணியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மீனாகுமாரி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.