விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) வீரா்கள் 3 நாள்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஆரோவில் சா்வதேச நகரில் தேசிய பாதுகாப்பு படையைச் சோ்ந்த 120-க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரா்கள் பிப். 9 முதல் 11-ஆம் தேதி வரை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
அதி நவீன கருவிகள் மற்றும் இரவில் இயங்கும் திறன் கொண்ட ‘ட்ரோன்கள்’ மற்றும் ‘தொ்மல் கண்காணிப்பு கேமராக்கள்’, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் இந்த ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன. நவீன கருவிகளின் உதவியுடன், இருளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பது மற்றும் போா் ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரும் பங்கேற்றனா்.
ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி ஜி. சீதாராமன் என்.எஸ்.ஜி. வீரா்களுடன் கலந்துரையாடினாா். ‘தொ்மல் கேமராக்கள்’ முதல் தாக்குதல் நாய்கள் வரை, பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் அனைத்து அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளைக் கேட்டறிந்தாா்.
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற என்.எஸ்.ஜி. கமாண்டோ படை வீரா்கள்,புதன்கிழமை ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள மாத்ரிமந்திரில் கூட்டுத் தியானம் மேற்கொண்டனா்.