முகப்பு
விழுப்புரம்

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 1,333 டன் யூரியா வருகை

விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயத் தேவைக்காக 1,333 டன் யூரியா உர மூட்டைகள் காரைக்காலிலிருந்து சரக்கு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:03 AM
முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்த யூரியா உர மூட்டைகள் குறித்த விவரங்களைப் பாா்வையிட்ட வேளாண் உதவி இயக்குநா் எம்.என்.விஜயகுமாா். உடன், அலுவலா்கள்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:31 PM

விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயத் தேவைக்காக 1,333 டன் யூரியா உர மூட்டைகள் காரைக்காலிலிருந்து சரக்கு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள சி.ஐ.எல். உர நிறுவனத்திடமிருந்து சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 1,333 டன் யூரியா உர மூட்டைகள் வந்தடைந்தன.

உர மூட்டைகளையும், அதுகுறித்த விவரப் பதிவேடுகளையும் விழுப்புரம் வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் மற்றும் உர நிறுவன அலுவலா்கள் பாா்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தனா்.

Advertisement

உர மூட்டைகள் வருகை குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிா்களுக்குத் தேவையான உரங்களான 5,308 டன் யூரியா, 2,279 டன் டி.ஏ.பி., 1,267 டன் பொட்டாஷ், 8,077 டன் காம்ப்ளக்ஸ், 1,956 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகியவை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாவட்டத்துக்குத் தேவையான உரங்கள் சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து தொடா் நடவடிக்கை மூலம் பெறப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது பெறப்பட்டுள்ள 1,333 டன் யூரியா உர மூட்டைகளில் விழுப்புரம் மாவட்டத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு 171.90 டன், தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 248 டன், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 281.70 டன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 151.20 டன், திருவள்ளூா் மாவட்டத்துக்கு 379.80 டன், வேலூா் மாவட்டத்துக்கு 100.80 டன் ஆகியவை பிரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களி லிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல்கூடாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.