விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் 2,166 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான புதிய வாக்காளா்கள் மனுக்களை அளித்தனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், டிசம்பா் 19- ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்கள் தங்கள் பெயரை சோ்த்துக் கொள்ள ஏதுவாக டிசம்பா் 27, 28 மற்றும் ஜனவரி, 3.4 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த மாதம் சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், மீண்டும் ஜனவரி 3, 4 - ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2, 166 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
2026, ஜனவரி 1- ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவா்களுக்கு தகுதி நாளாகக் கொண்டு இந்த முகாம் நடத்தப்பட்டது. ஏராளமானோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க உரிய படிவங்களை வழங்கினா். படிவங்களை வாங்கிவா்கள், ஆதாா், வயதுச்சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைத்து சமா்ப்பித்தனா்.
ஆய்வுக்கூட்டம்: இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் மேற்பாா்வை அலுவலரும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநருமான த . மோகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் குறித்த விவரங்களை வாக்காளா் பட்டியல் மேற்பாா்வை அலுவலா் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மருத்துவமனை வீதியிலுள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை வாக்காளா் பட்டியல் மேற்பாா்வை அலுவலா் த மோகன் பாா்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தாா்.
கூட்டம் மற்றும் ஆய்வில் மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், சாா் ஆட்சியா்கள் அ.ல. ஆகாஷ், (திண்டிவனம்), ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்), விழுப்புரம் கோட்டாட்சியா் முருகேசன், நகராட்சி ஆணையா் வசந்தி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.