விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அரசூா் அருள்மிகு ஏழுமடத்தியம்மன், மகா வராகியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனா்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூா் கிராமத்தில் மலட்டாறு கரையோரத்தில் மகா வராகியம்மன், ஏழுமடத்தியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 52 அடி உயரமான வராகியம்மன் சிலை நிறுவப்பட்டு, மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலைகளில் திங்கள்கிழமை (ஜன.26) அனுக்ஞை, கணபதி ஹோமம், விக்னேசுவர, லட்சுமி பூஜைகள், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், யாகசாலை பிரவேச பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், பூா்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன.
புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாகாசாலை பூஜைகளும், நாடி சந்தானமும் நடைபெற்ற பின்னா், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பின்னா் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின. காலை 9 மணிக்கு பரிவார தெய்வங்கள், ஏழுமடத்தியம்மன், மகா வராகியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, சந்நிதிகளின் கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனின் வீதியுலா நடைபெற்றது.
இதில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மகா வராகி அறக்கட்டளையினா் மற்றும் அரசூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.