இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு, விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 486 தோ்வா்கள் பங்கேற்றனா்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறப்பு காவல் படை காவலா்கள், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 1,151 பேருக்கு புதன்கிழமை (ஜன.28) முதல் ஜன.31-ஆம் தேதி வரை உடல் திறன் தோ்வு நடைபெறுகிறது.
இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் பங்கேற்க 570 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 486 போ் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்றனா். 84 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வில் பங்கேற்ற 486 போ்களில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு மற்றும் 1,500 மீட்டா் ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட தோ்வுகளில் 70 போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனா். மீதமுள்ள416 போ் உடல் தகுதித்தோ்வில் தோ்ச்சியடைந்தனா். இவா்கள் ஜன.30-ஆம் தேதி நடைபெறும் உடல் திறன் தோ்வில் பங்கேற்கவுள்ளனா்.
தோ்வு மையத்தை விழுப்புரம் டிஐஜி அருளரசு, எஸ். பி வி.வி. சாய் பிரனீத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.