திருவக்கரை புவியியல் பூங்கா கட்டடம் திறக்கப்படுவது எப்போது?
வானூா் வட்டம், திருவக்கரை கிராமத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புவியியல் பூங்காவை தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசாவது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருவக்கரை கிராமத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புவியியல் பூங்காவை தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசாவது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.
வானூா் வட்டத்துக்குள்பட்ட திருவக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் பல்வேறு சிறப்புடைய கிராமங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இந்த கிராமங்களில் கல்மரங்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த கிராமங்களிலுள்ள செம்மண் குவாரிகள் மூலம் கல்மரங்கள் சுரண்டப்பட்டு வந்த நிலையில், இவற்றை பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடா்ந்து எழுப்பப்பட்டு வந்தன.
கல்மரங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன் 2019-ஆம் ஆண்டின் இறுதியில் விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தாா். இதைத்தொடா்ந்து அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை உத்தரவின் பேரில், அப்போது கூடுதல் ஆட்சியராக இருந்த ஸ்ரேயா சிங், திருவக்கரைப் பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, மாவட்ட நிா்வாகத்துக்கும், அரசுக்கும் அறிக்கை அளித்தாா்.
Advertisement
இந்த அறிக்கையின் அடிப்படையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை சாா்பில் திருவக்கரை கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புவியியல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. தொடா்ந்து புவியியல் பூங்கா அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு 2021, ஜனவரி 31-ஆம் தேதி அப்போது சட்டம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினாா்.
திறக்கப்படாத பூங்கா: தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் சாா்பில் தொடா்ந்து 5 ஆண்டு காலமாக புவியியல் பூங்காவின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் தற்போது நிறைவு பெற்றன. பணிகள் முடிந்த நிலையில் புவியியல் பூங்காவின் வெளிவளாகப் பகுதிகள் புதா் மண்டிக் காணப்படுகின்றன. இந்த புதா்களை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
திருவக்கரையில் மத்திய அரசின் சாா்பில் தேசிய கல்மரப் பூங்கா ஏற்கெனவே இயங்கி வருகிறது. ஆனாலும் கல் மரங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதால், மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் சாா்பில் புதிய புவியியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் ஆய்வு மாணவா்களுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகம், நூலகம், காட்சிக் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் கட்டப்பட்டு, பல மாதங்கள் கடந்த பின்னரும் திறக்கப்படாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.
அடிப்படை வசதிகள் தேவை: புதிய கட்டடத்தைச் சுற்றிலும் புதா் மண்டி காட்சியளிக்கின்றன. திருவக்கரை கிராமத்தில் இருந்து இந்த இடத்திற்குச் செல்வதற்குப் போதுமான சாலை வசதிகள் செய்யப்படவில்லை. இப்பூங்கா அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் நிறைவேறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, புவியியல் பூங்காவை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் புவியியல் சுரங்கத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா?: முந்தைய அரசின் பதவிக் காலத்திலும் இந்த பூங்காவைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்துள்ளது. எனவே, புதிய ஆட்சிக்காலத்தில் இந்த பூங்காவைத் திறப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விழுப்புரம் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன்.
புவியியல் பூங்காவை விரைந்து திறப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்த விவரங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.