முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

தூத்துக்குடி சட்டப்பேரவைத்  தொகுதி மக்களின் தீராத பிரச்னைகள்...

முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தீராத பிரச்னைகள் பல இருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டு கூறும்படி சில அடிப்படைப் பிரச்னைகள் நீண்டநாள்களாகவே தீர்க்கப்படாமல் உள்ளன. குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நேரிசல், புதை சாக்கடை திட்டப் பணிகள் உள்ளிட்டவை அதில் முக்கிய இடத்தில் உள்ளன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தீராத பிரச்னைகள் பல இருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டு கூறும்படி சில அடிப்படைப் பிரச்னைகள் நீண்டநாள்களாகவே தீர்க்கப்படாமல் உள்ளன. குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நேரிசல், புதை சாக்கடை திட்டப் பணிகள் உள்ளிட்டவை அதில் முக்கிய இடத்தில் உள்ளன.

குடிநீர் பிரச்னை: தூத்துக்குடியில் எந்தவொரு தேர்தல் நடைபெறுவதாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் முந்திக்கொண்டு அறிவிப்பது தினமும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்ற வாக்குறுதியைத்தான். ஆனால், இதுவரை ஒருநாள்விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில்கூட தண்ணீர் முறையாக விநியோகிக்கப்படாதது மக்களுக்கு பிரச்னையாகவே இருந்து வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 60 வார்டுகளில் 8 வார்டுகளை தவிர 52 வார்டுகளும் தூத்துக்குடி பேரவைத் தொகுதிக்குள் வருவதால், மக்கள் நெரிசல் மிகுந்த இப்பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்: தூத்துக்குடி மாநகரப் பகுதியை டபுள்யுஜிசி சாலை, வி.இ.சாலை என இரண்டு சாலைகளாகப் பிரித்துவிட முடியும். ஏனென்றால், இந்த இரண்டு சாலைகளே பிரதான சாலைகளாக உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஒரு பிரச்னையாக நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பகட்ட பணிகளுக்குப் பிறகு முன்னேற்றம் இல்லை. எனவே, இந்தப் பணியை விரைந்து தொடங்கி போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது கோரிக்கைகளில் மற்றொன்றாகும்.

தாமதமாகும் புதை சாக்கடை பணிகள்: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதைக் கருத்தில்கொண்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதை சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது.

சில இடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்றபோதிலும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டே செல்வதால் அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் தூத்துக்குடி மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இதுதவிர, தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை, இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் உள்ளிட்டவை அமைக்க வேண்டும், பேரவைத் தொகுதிக்குள்பட்ட புறநகர் பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி வேண்டும் என்பதும் தீர்க்கப்படாத நீண்ட நாள் கோரிக்கைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.