ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் ஏற்பட்ட மாறுதல்களும், சட்டமன்றங்களில் இந்தியர்கள் இடம்பெற்றதும் தற்செயலாக நடந்தவை அல்ல. அதில் பல புரட்சிகள், தியாகங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் பங்கு மிக அதிகம் ஆகும். அவற்றில் முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
பிரிட்டிஷ் ஆட்சி
கிழக்கு இந்தியா ஹவுஸ், லண்டன்
1600, டிசம்பர் 31-ம் தேதி, இந்திய பட்டயச் சட்டம் (The Charter Act of India, 1600) இயற்றப்பட்டு, அதன்மூலம் இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கு இந்தியா கம்பெனிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பிறகு அந்தக் கம்பெனி, சிறிது சிறிதாக அரசியல் அதிகாரம் பெற்று, 1676, அக்டோபர் 5-ம் தேதி, இந்திய பட்டயச் சட்டம் மூலம் ரூபாய், பைசா என நாணயங்கள் அச்சிட அதிகாரம் பெற்றது. அத்துடன், 1683, ஆகஸ்ட் 9-ம் தேதி, இந்திய பட்டயச் சட்டம் மூலம், போரை அறிவிக்கவும் வழிநடத்தவும் அதிகாரம் பெற்றது.
இந்திய பட்டயச் சட்டத்தின் மூலம், 1726, செப்டம்பர் 24-ம் தேதி கிழக்கு இந்திய கம்பெனிக்கு நீதிமன்றங்கள் அமைக்கவும், 1687, டிசம்பர் 11-ல் மாகாணங்கள் அமைக்கவும், 1726, செப்டம்பர் 24-ம் தேதி மேயர் பதவி நிர்ணய அதிகாரமும் வழங்கப்பட்டது. இதுதவிர, 1757-ல் பிளாசிப் போரின் வெற்றிக்குப் பிறகு, மேலும் பல சலுகைகள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டன.
இப்படி பல சலுகைகளால் பல அத்துமீறல்களை எதிர்ந்து நாடு முழுவதும் ஆங்காங்கே சிறு சிறு கிளர்ச்சிகள் நடைபெற்றன. தமிழகத்திலும், கம்மந்தான் கான் சாகிபு, நெற்கட்டாஞ் செவல் பூலித்தேவர், பாளையக்காரனான வீரபாண்டியன், சிவகங்கை மருது சகோதரர்கள் போன்றோர் புரட்சி வழியில், பிரிட்டிஷாருக்கு எதிரான கிளர்ச்சிகளும் புரட்சிகளும் செய்தனர்.
ஒழுங்குமுறைச் சட்டம், 1773 (Regulating Act, 1773)
1773, மே 18-ம் தேதி, நார்த் பிரபு என்பவரால், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம், 1773 அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையைப் போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்கள் நடைமுறையில் இருந்தன. இந்த மாகாணங்களுக்குப் பொறுப்பாக, தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ், அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) வங்காள ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதன்படி, கிழக்கு இந்தியா கம்பெனியின் இயக்குநர்கள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்படும் இயக்குனர்களிடம் 500 பவுண்ட் முதல் 1000 பவுண்ட் வரை முதலீடு இருப்பு இருக்க வேண்டும். 3000 பவுண்ட் இருப்பு இருப்பவர்களுக்கு இரண்டு வாக்குகளும், 10000 பவுண்ட் இருப்பு வைத்திருப்பவர்கள் நான்கு வாக்குகளும் பெற்றனர்.
இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி
1799-ம் ஆண்டு, ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த நான்காம் போரில் திப்பு சுல்தான் மரணமடைந்தார். இந்த வெற்றிக்குப் பின், ஆற்காடு நவாபுகளின் உரிமையில் ஆங்கிலேயர் தலையிட்டு நவாப் என்னும் அதிகாரத்தைப் பறித்து, ஆற்காடு இளவரசன் என்ற பட்டத்தைக் கொண்டுவந்து, முழு ஆதிக்க அதிகாரத்தைப் பெற்றனர். திப்பு சுல்தான் மகன்கள் 13 பேரும், மகள்கள் 6 பேரும், வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதனால், வேலூர் கோட்டையில் இருந்த இந்திய வீரர்களுக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டும் உணர்ச்சி உள்ளுக்குள் புகைந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், 1806-ல் மதராஸ் படைக்கு முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சர் ஜான் கிரடேக் என்பவர், பல விதிமுறைகளைப் புகுத்தினார். இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக்கூடாது. தலையில் குடுமி வைக்கக்கூடாது. விபூதி, நாமம் போட்டுக்கொள்ளக்கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது போன்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
மேலும், 'கிருதா' வைத்துக்கொள்ளக்கூடாது. காதில் தோடு போடக்கூடாது. சிப்பாய்கள், ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது, இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த 1500 வீரர்களுக்குக் கோபத்தை மூட்டியது. இதையடுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்குத் தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்தியச் சிப்பாய்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில், வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்தக் கிளர்ச்சிக்குக் காரணம் என குற்றம் சாட்டி, அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்தியச் சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி புரட்சியில் ஈடுபட்டு, கிளர்ச்சி சம்பந்தமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த லெப்டினென்ட் ஈவிங், கேப்டன் மக்லாசலன், தளபதிகள் மிட்சல், பேபி, ஜேனார், சார்ஜன்ட் பிராடி, லெப்டினென்ட் கட்க்ளிப் ஆகியோர் மீது அதிகாலை மூன்று மணி அளவில் தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில், 372 பேர் கொண்ட பிரிட்டிஷ் படையினரில் 191 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து, ஆற்காட்டில் இருந்த கர்னல் கில்ஸ்பீக்கு மேஜர் கோட்ஸ் மூலம் தகவல் போனது. அங்கிருந்து ஆங்கிலேயப் படைகள் புறப்பட்டு வந்து, வேலூர் கோட்டையில் நடந்த புரட்சியை அடக்கின. புரட்சியை ஒடுக்கிய கில்ஸ்பீக்கு 24,500 பொற்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன மற்றவர்களுக்குப் பதவி உயர்வு. கிளர்ச்சியில் ஈடுபட்ட நம் இந்திய வீரர்கள் மீது விசாரணை நடத்திய கர்னல் ஹார்கோர்ட், அதில் 6 பேரை பீரங்கியாலும், 5 பேரை துப்பாக்கியாலும் சுட்டுக் கொல்லச் செய்தான். 8 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2 பேர் நாடு கடத்தப்பட்டனர். இத்தகவல்கள் அனைத்தும், வேலூர் மாவட்ட மேனுவலில் (Vellore District Manual) இடம்பெற்றுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், மீரட் நகரில் 1857, மே 10-ந் தேதி கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக இந்தியச் சிப்பாய்கள் செய்த கிளர்ச்சியைத்தான் வரலாற்று ஆசிரியர்கள் முதல் சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில், அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்னரே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் முதல் புரட்சி. இதை, வேலூர் சிப்பாய்க் கலகம் என வரலாறு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இதுவே முதல் இந்தியச் சுதந்தரப் போராட்டமும் ஆகும். இந்திய அரசும், இதைக் கவனத்தில்கொண்டு, நினைவுத் தபால் தலையும் வெளியிட்டுள்ளது
சிப்பாய்க் கலகம், 1857 (Indian Rebellion of 1857)
1764-ம் ஆண்டு, பக்சார் போருக்குப் பின் கிழக்கு இந்திய வணிகக் குழு, இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சிபெற்றது. அதற்குப் பிறகான காலகட்டத்தில், இந்தியாவின் வளங்கள் அனைத்தும் அந்தக் கம்பெனியின் வணிக முன்னேற்றத்துக்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தின. தொழில் புரட்சியின் விளைவாக, பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால், உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன.
காவல் துறை, கீழ் நீதிமன்றங்கள், சிறு அதிகாரிகளிடம் ஊழல் மலிந்து காணப்பட்டது. ஆங்கிலேயே வணிகர்கள், தங்களது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதேநேரம், இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே, இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து, இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கிச் சென்றன. தவிர, ஆங்கிலேயர்கள் விதித்த நில வரி, மக்கள் நலனுக்கு எதிராக அமைந்திருந்தன. படைப்பிரிவிலும் உயர்ஜாதி பிராமணர்கள், ரஜபுத்திரர்கள் மற்றும் பிற ஜாதியினரிடையே பாகுபாடுகள் அதிகமாயின என, 1859-ல் புரட்சிக்கான காரணங்களைப் பதிவு செய்த வில்லியம் எட்வர்டு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது சிப்பாய்க் கலகம் என்பது சிப்பாய்கள் 10, மே மாதம், 1857-ல், மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில் பரவியது. இக் கிளர்ச்சியில் பெரும்பாலான மக்கள் மக்கள் ஈடுபட்டனர். முக்கியக் கிளர்ச்சி, இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் குர்கான் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். 1858, ஜூன் 20-ம் தேதி குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன், இந்தக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி, ‘இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்’ அல்லது ‘சிப்பாய்க் கலகம்’ எனவும் குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்து அரசியின் நேரடி ஆட்சி
1759-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசிக்கு கடிதம் எழுதிய டே கிளைவ் பிட்டு (Pitt), இந்தியாவில் ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்படி குறிப்பிட்டிருந்தார். ஆனால், 1857-ம் ஆண்டுப் புரட்சியின் விளைவாக, பிரிட்டிஷ் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, இந்தியாவில் மறுசீரமைப்பை தவிர்க்க முடியாத ஒன்றாக்கிவிட்டது. இந்திய அரசுச் சட்டம், 1858-ன்படி, கிழக்கு இந்திய கம்பெனியிடம் இருந்த ஆட்சி அதிகாரம், 1858 நவம்பர் 1-ம் தேதி அன்று, இங்கிலாந்து மகாராணியிடம் மாற்றப்பட்டது. கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மாற்றப்பட்டு, அரசுச் செயலர் (Secretary of State) நியமிக்கப்பட்டார். இச்சட்டம், ஒரு நிர்வாகக் குழுவை வைத்துக்கொள்ள கவர்னர் ஜெனரல் அதிகாரம் வழங்கியது. இதையடுத்து, கவர்னருக்கு உதவிட 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
கர்சன் பிரபு
கானிங் பிரபு காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், 1860; குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1861; உயர் நீதிமன்றங்கள் சட்டம், 1858 போன்றவை இயற்றப்பட்டன.
கானிங் பிரபு (1856-1862), எல்ஜின்-1 (1862-1863), சர் ஜான் லாரன்ஸ் (1864-1869), மேயோ (1869-1872), நார்த் புரூக் (1872-1876), பிட்டன் (1876-1880), ரிப்பன் (1880-1884), பஃரின் (1884-1888), லான்ஸ்டெளன் (1888-1894), எல்ஜின்-2 (1894-1899), அகர்சன் (1899-1905) போன்றோர் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றி இருந்தாலும், கானிங் மற்றும் கர்சன் பிரபு காலத்தில்தான் நிர்வாகம், பாராளுமன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கானிங் பிரபு
நிர்வாக வசதிக்காக, இந்தியாவை வங்காளம், சென்னை, பம்பாய் ஆகிய மூன்று மாகாணங்களாகப் பிரிட்டிஷார் பிரித்தனர். அப்போது இருந்த நிதி நெருக்கடியால், நகராட்சிகள், மாவட்டப் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், நிர்வாகத்தைப் பரவலாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1864-க்கும் 1868-க்கும் இடையில், உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. உறுப்பினர்கள், மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் இயங்கினர்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், உறுப்பினர்கள் அரசு சாராதவர்களாக இருக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தது. வாக்குரிமைக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால், குறைவான வாக்குகளிலேயே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசு சாராதோர், தலைவர் பதவிக்குப் படிப்படியாக வந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமையை அரசு தன்வசம் வைத்துக்கொண்டது. அரசுக் கட்டுப்பாட்டில் இருந்ததால், அந்த அமைப்புகள் அரசுத் துறைபோலவே செயல்பட்டு வந்தன.
மின்டோ – மார்லீ சீர்திருத்தங்கள்
மின்டோ
மார்லி
இந்திய பட்டயச் சட்டம், 1833-ன்படி, 1909-ம் ஆண்டு வரை, இந்தியர் அல்லாதவர்களால்தான் இந்தியா ஆளப்பட்டு வந்தது. இந்திய அரசின் செயலர் ஜான் மார்லியும், அப்போதைய வைசிராய் மின்டோவும் இணைந்து, இந்திய கவுன்சில் சட்டம், 1909-ஐ அறிமுகம் செய்தனர். இதுவே, மின்டோ – மார்லீ சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், சட்டமன்றங்களுக்கு முதன்முதலாகத் தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்த்தப்பட்டது. அதில் 27 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். ஆயினும், சட்டமன்றத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
தேர்தலுக்கான கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. தேர்தல் மறைமுகமாக நடத்தப்பட்டது. மத்திய சபை உறுப்பினர்களை மாகாண உறுப்பினர்கள், முனிசிபல் உறுப்பினர்கள், மாவட்ட வாரியங்கள், வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நில உரிமையாளர்கள் தேர்ந்தெடுத்தனர். பகுதி வாரியான பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு ஒத்துவராது என்று கருதி, ஜாதிவாரியான பிரதிநிதித்துவம் பரிந்துரைக்கப்பட்டது. உறுப்பினர்கள் விவாதிக்கவும், துணைக் கேள்விகள் கேட்கவும் வழிவகை செய்தது. ஆனாலும், வெளிநாட்டு உறவுகளைப் பேசவோ, அரசியின் செயல்பாடுகள் பற்றிப் பேசவோ அனுமதி இல்லை. இருந்தாலும், தேர்தல், அரசியலமைப்பு ரீதியாக வளர்ச்சி என்றபோதிலும், பிரிவினைக்கு வழிவகுத்தது இத்திட்டத்தின் குறைபாடாகும். மின்டோவுக்கு பின் வந்த ஹார்டிஞ்ச், தலைநகரை கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றினார்.
ஹோம்ரூல் இயக்கம்
1875-ம் ஆண்டு, ரஷ்ய நாட்டைச் சார்ந்த H.P. பிலாவட்ஸ்கி (H.P. Blavatsky), அமெரிக்க கலோனல் H.S. ஆல்காட் (H.S. Olcott) இருவரும் சேர்ந்து, இந்து சமயத்துக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில் நியூயார்க்கில் தியோசாஃபிகல் சொசைட்டியை உருவாக்கினர். அதன்பின், 1879-ம் ஆண்டு அப்போதைய சென்னையின் புறநகர்ப் பகுதியான அடையாரில் ஒரு கிளையைத் தொடங்கினர். பிறகு அதை, 1882-ல் தலைமையகமாக மாற்றினர்.
பிலாவட்ஸ்கி
ஆல்காட்
அன்னி பெசன்ட்
அயர்லாந்து நாட்டில் பிறந்த அன்னி பெசன்ட், இந்தியாவை மிகவும் நேசித்தார். 1893-ல், சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில் கலந்துகொண்டபின், தியோசாஃபிகல் சொசைட்டிக்கு தன்னை அர்ப்பணித்தார். 1893 நவம்பர் 16-ம் தேதி தமிழகம் வந்தார். 1907-ல், ஆல்காட் இறந்த பிறகு, தியோசாஃபிகல் சொசைடியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
1913-ல் தீவிர ஹோம் ரூலுக்கு அடிகோலினார். சுயராஜ்ஜியம் என்பதுதான் ஹோம் ரூல் இயக்கத்தின் முக்கியக் குறிக்கோளாகும். லோகமான்ய பாலகங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்டை தலைவராகவும், G.S. அந்துலேவை அமைப்புச் செயலாளராகவும், சி.பி. ராமசாமியை பொருளாளராகவும் கொண்டு இந்த ஹோம் ரூல் இயக்கம் செயல்பட்டது. அப்போதுதான், ‘சுதந்தரம் எனது பிறப்புரிமை’ என்று திலகர் முழங்கினார். 1917, ஜூன் மாதம் அன்னி பெசன்ட் கைது செய்யப்பட்டு, அதன்பிறகு மக்கள் கிளர்ச்சியின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
இக்கிளர்ச்சியின் விளைவாக, இந்தியா குறித்த தனது கொள்கையை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அதற்கென 1918-ம் ஆண்டு மான்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆதார நூல்கள்
The Gazetteer of India Vol. 2, Dr. Chopra, Ministry of Information & Broadcasting
‘இந்திய விடுதலையை முன்னெடுத்த புரட்சிகள்’ - பேராசிரியர் ந. சஞ்சீவி
‘March to Freedom in Madras Presidency 1916-1947’ - Saroja Sundararajan
‘நவீன கால இந்தியா’ - பிபன் சந்திரா
‘A constitutional History of India’ - Arthur Berriedale Keith
‘Landmarks in Indian Legal and Constitutional History’ - B.M. Gandhi
‘History of Freedom Struggle’ - Dr. G. Venkatesan
***
முந்தைய கட்டுரை 1: வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான தகுதிகள்– கல்வெட்டுகள் சொல்லும் சேதி என்ன...? |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.