தமிழகத் தேர்தல் களம் 2016

தேவை வேலை!

பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பதுதான். வாழ்க்கைத் திறன் அதிகரிக்கப்பட வேண்டுமானால் உற்பத்திப் பெருக்கம் மட்டும் இருந்தால் போதாது. வேலைவாய்ப்பும் அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்காத உற்பத்திப் பெருக்கத்தால் எந்தப் பயனும் கிடையாது.

ஆசிரியர்

பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பதுதான். வாழ்க்கைத் திறன் அதிகரிக்கப்பட வேண்டுமானால் உற்பத்திப் பெருக்கம் மட்டும் இருந்தால் போதாது. வேலைவாய்ப்பும் அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்காத உற்பத்திப் பெருக்கத்தால் எந்தப் பயனும் கிடையாது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது என்னவோ உண்மை. ஆனால், அதற்கு ஏற்றாற்போன்ற ஏற்றுமதி அதிகரிப்போ, வேலைவாய்ப்பு உருவாக்கமோ இல்லை. இந்தியா எதிர்கொள்ளும் இன்றைய பிரச்னை இதுதான். இதை மனதில் வைத்துத்தானோ என்னவோ, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், நாம் பொருளாதார வளர்ச்சி அடைகிறோம் என்று அளவுக்கு அதிகமாக பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் பத்து லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரும் வரிசையில் இணைகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றனவா என்றால் இல்லை. இதன் நேரடி விளைவு என்னவென்றால், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

"வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அடுத்த 10 ஆண்டுகள் நாம் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய பிரச்னை' என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஒப்புக் கொள்கிறார். இந்தியாவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை 6.8%-இல் இருந்து 9.6%-ஆக 2001 - 2011 இடையேயான பத்து ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இப்போது அது நிச்சயமாக மேலும் அதிகரித்திருக்கும்.

இந்திய மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள். இந்த இளைஞர் சக்தியை நாம் முறையாகப் பயன்படுத்தினால் உலக வல்லரசாக மாறுவது கடினமொன்றும் அல்ல. ஆனால் மாதம் தோறும் வேலை தேடத் தயாராகும் 10 லட்சம் இளைஞர்களுக்கு எப்படி வேலை ஏற்படுத்துவது என்பதற்கு அரசிடம் தெளிவான திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. "ஸ்கில் இந்தியா', "மேக்இன் இந்தியா' என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, அவை எந்த அளவுக்குச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன என்று கேட்டால் விடை இல்லை.

2010-இல் ஜவுளி, தோல் பதனிடுதல், உலோகங்கள், மோட்டார் வாகனங்கள், நகைகள், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், கைத்தறி, விசைத்தறி ஆகிய துறைகளில் ஏறத்தாழ 11 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதற்குப் பிறகு ஏற்பட்ட தேக்கமும், வீழ்ச்சியும், இந்தத் துறையைச் சேர்ந்த 15 லட்சம் பேரை வேலை இழக்கச் செய்ததுதான் சோகம்.

2015-இல் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டு வெறும் 3 லட்சம் வேலைவாய்ப்பு மட்டுமே உருவாக்கப்பட்டது. இப்போது நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 91,000 வேலைகள்தான் உருவாகியிருக்கின்றன.

இதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும். பலவீனமான தொழில் வளர்ச்சி, வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயம், சர்வதேசப் பொருளாதார மெத்தனம், கிராமப்புற முன்னேற்றத்தில் தேக்கம், அதிகரித்து வரும் இயந்திரமயமாதல் என்று பல காரணங்கள் இருக்கின்றன. இவை எல்லாமே வேலைவாய்ப்பு உருவாகாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

2015-16க்கான பொருளாதாரப் புள்ளிவிவரப்படி, 1989 முதல் 2010 வரையில் உருவான ஏறத்தாழ 1 கோடி வேலைவாய்ப்புகளில், 35% வேலைகள் மட்டுமே அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாகி இருக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் 40% தொழில் துறையால் பெறப்படுகிறது என்றாலும் அதில் உருவாகும் வேலைவாய்ப்பு வெறும் 7% மட்டுமே. அதேநேரத்தில், விவசாயம், நெசவு உள்ளிட்ட முறைசாராத் தொழில்கள் பொருளாதாரத்தில் 60% பங்களிப்பை நல்குவதுடன் 93% வேலைவாய்ப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன. இது தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் "ஸ்கில் இந்தியா', "மேக்இன் இந்தியா' போன்ற திட்டங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் இன்று இத்தகைய நிலையை நாம் எதிர்கொண்டிருக்க மாட்டோம். வேலைவாய்ப்பு குறித்த தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் போனதுதான் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைக்குக் காரணம்.

இந்தியாவில் இப்போது மூன்று பட்டதாரிகளில் ஒருவர் வேலை தேடுபவர். பொறியியல் படித்துக் கொண்டிருப்பவர்களில் 25% பேர் வேலை கிடைக்கத் திண்டாடப் போகிறார்கள். பள்ளிக்கூடப் படிப்புடன் நின்றுவிட்டவர்களில் 40% பேர் கெளரவம் பார்க்காமல் எந்த வேலையும் பார்க்க முன்வராவிட்டால், வேலையில்லாதவர்கள் பட்டியலில் நிரந்தரமாக இடம்பெற்றாக வேண்டும்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. குறிப்பாக இணைய வணிகம், வங்கித் துறை, போக்குவரத்து போன்ற துறைகளில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் நிறையவே காணப்படுகின்றன. அரசே முனைப்புக்காட்டி, இந்திய இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தாக வேண்டும். வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிப்பது, ஆபத்தை விலைக்கு வாங்குவது போன்றது என்பதை அரசு உணர வேண்டும். விழித்துக் கொள்ள வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT