முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக 85 சதவீத வாக்காளர்களை ஏமாற்றி வஞ்சகம் செய்துள்ளது: திரிபுரா முதல் மானிக் சர்க்கார்

அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடகட்சிகள் 50 ஆண்டுகளாக 85 சதவீத வாக்காளர்களை ஏமாற்றி வஞ்சகம் செய்து வந்துள்னர் என திரிபுரா மாநில முதல்வர் மானிக்சர்க்கார் தெரிவித்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடகட்சிகள் 50 ஆண்டுகளாக 85 சதவீத வாக்காளர்களை ஏமாற்றி வஞ்சகம் செய்து வந்துள்னர் என திரிபுரா மாநில முதல்வர் மானிக்சர்க்கார் தெரிவித்தார்.

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திரிபுரா மாநில முதல்வர் மானிக்சர்க்கார் பங்கேற்று பேசினார். அவர் பேசியது:

தமிழகத்தில் மே.16-ஆம் தேதி நடைபெறும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களிடையே நிச்சயமாக மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் போட்டி திமுக, அதிமுகவிற்கும் மட்டும் அல்ல. 6 கட்சி கூட்டணியான தேமுதிக-தமாகா, மக்கள் நலக்கூட்டணி அதிமுகவிற்கு, திமுகவிற்கு மாற்றாக 3-வது அணியாக உருவாகி சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 6 கட்சி கூட்டணிதான் தேர்தல் களத்தில் முன்னணியில் உள்ளது.

அதிமுகவும், திமுகவும் தேர்தல் வந்தால், குடம், குடமாக கண்ணீர் வடிப்பார்கள். ஏழை, எளிய மக்களின், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவோம் என ஆதரவாகி பேசியும், வானாளவிய வாக்கறுதிகளை அளித்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவும் சரி, திமுகவும் சரி வாக்குறுதிகளை மறந்துவிட்ட நிலபிரபுகளுக்கும், பெரிய முதலாளிகளுக்கும், கருப்ப சந்தைதாரர்களுக்கும், வரி ஏய்ப்பவர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் சேவகம் செய்வார்கள். அடிப்படையில் இந்த இரு கட்சிகளும் பணக்கார வர்க்கத்தின் கட்சிகள்தான். தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திமுக, அதிமுக ஆட்சி போதும் என முடிவு எடுத்துவிட்டனர்.

திரிபுராவில் இடதுசாரிகளின் ஆட்சி நடைபெறுகிறது. மானிக்சர்க்காராக நான் 18 ஆண்டுகளாக முதல்வராக உள்ளேன். திரிபுராவில் நிலமற்றவர்களுக்கும் நிலம், வீடற்றவர்களுக்கு வீடு கொடுத்துள்ளோம். பட்டினி சாவு கிடையாது. விவசாயிகள் தற்கொலை கிடையாது. கல்லூரி வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. கேரளாவை விட இந்தியாவிலேயே எழுத்தறிவு பெற்றவர்கள் 97 சதவீதமாக உள்ளனர். இன்னும் ஓராண்டில் நூறு சதவீதமாகவிடும். திரிபுரா மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் உள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் நல்ல சாலைவசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. தனித்து வாழும் பெண்கள் உள்ளிட்டோருக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் திராவிட கட்சிகள் எவ்வித வளர்ச்சி பணியும் செய்யவில்லை. இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 6 கட்சி அணி வெற்றி பெற வேண்டியது காலத்தின் தேவையாகும் என திரிபுரா முதல்வர் மானிக்சர்க்கார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.