ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனுக்கு சுக்கிரதசை நடக்கிறது. குழந்தை பருவத்தில் சுக்கிர தசை வந்தால் குட்டிச் சுக்கிரன் கொட்டிக்கவிழ்க்கும் என்றும் குன்னக்குடி முருகன் கோயிலில் தத்து கொடுத்துவிட்டு பின்னர், தத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். இது சரியா? புதன், குரு, சுக்கிர பகவான்களின் இணைவு நலமா? தந்தை மகன் உறவு வளர்ச்சி எவ்வாறு அமையும்? தொழில் ஸ்தானம் எவ்வாறு உள்ளது?

என் பேரனுக்கு சுக்கிரதசை நடக்கிறது. குழந்தை பருவத்தில் சுக்கிர தசை வந்தால் குட்டிச் சுக்கிரன் கொட்டிக்கவிழ்க்கும் என்றும் குன்னக்குடி முருகன் கோயிலில் தத்து கொடுத்துவிட்டு பின்னர்

தினமணி

உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னம் மற்றும் சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
பூர்வபுண்ணிய புத்திர மற்றும் அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் கிருத்திகை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ஐந்தாமதிபதி பன்னிரண்டாம் வீட்டுக்கு அதிபதியாகி பன்னிரண்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. இதனால் ஐந்தாம் வீட்டின் பலம் குறையுமா என்று கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். 
அஷ்டமாகிய எட்டாம் வீட்டிற்கும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியான சந்திரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
மூன்றாமதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ஆறு மற்றும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
களத்திர, நட்பு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் அயன ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகுபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து (விசாக நட்சத்திரம்) நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேது பகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
புதபகவானும் குருபகவானும் சுபக்கிரகங்களாகி கேந்திர ராசிகளுக்கு அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றபடி அவர்கள் இருவரும் பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுகிறது. அதோடு "மறைந்த புதன் நிறைந்த மதி; மறைந்த குரு நிறைந்த நிதி' என்கிற விதியும் பொருந்தும் என்று கூற வேண்டும். அதனால் அவருக்கு பத்தாம் வீட்டுக்கதிபதி பன்னிரண்டாம் வீட்டில் இருப்பது குறையல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும். 
பொதுவாக, பத்தாமதிபதி பன்னிரண்டாம் வீட்டில் (பகை பெற்றிருந்தால்) தொழில் சம்பந்தப்பட்ட இடையூறுகள் ஏற்படுமென்பதாலும் எதிலும் அலட்சியப் போக்குக்கு இடம் தராமல் நேர்மையாக ஈடுபடுவது நல்லது என்பதையும் இங்கு அனைவருக்காகவும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 

தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியனாவார். அவர் உச்சம் பெற்றிருக்கிறார். அவருடன் ஆட்சி பெற்ற லாபாதிபதி, தனாதிபதி, கேதுபகவான்கள் இணைந்திருப்பது தந்தைக்கு நன்மை செய்யும் அமைப்பாகும். தந்தையை குறிக்கும் வீடாக ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானம் அமைகிறது. அந்த வீட்டுக்கதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார். இதனால் தந்தைக்கும் தனயனுக்கும் இறுதிவரை நல்ல உறவு தொடரும். மேலும் இருவருக்கும் நீண்ட ஆயுள் உண்டு. 
பொதுவாக, லக்ன சுபரோ அல்லது அசுபரோ ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று தசையை நடத்தினால் அந்தத் தசையில் விசேஷமான வளர்ச்சி உண்டாகும் என்பது விதியாகும். அந்த கிரகத்திற்கு ஆதிபத்ய விசேஷம் இல்லாவிட்டாலும் ஸ்தான பலத்தின் மூலமாக நன்மைகள் உண்டாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
1,5,9 ஆகிய திரிகோணாதிபதிகளின் பலம் கூடி இருப்பதால் அவருக்கு தெய்வ பலம் இருக்கிறது என்றும் குருவருளால் வாழ்வில் சிறப்புகள் உயரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். 
பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிலும் ஒன்பது கிரகங்கள் கூடியிருப்பது ஒரு சிறப்பான தன யோகத்தைக் கொடுக்கிறது. 
12 ஆம் அதிபதி 12 ஆம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார். மேலும் தற்சமயம் சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. "" பால சுக்கிரன் கொட்டி கவிழ்க்கும்'' என்பது பொது விதி. இது பலரின் ஜாதகத்தில் அனுபவத்தில் ஒத்து வருவதில்லை. மாறாக, இந்த குட்டி சுக்கிரனின் தசையில் பெற்றோருக்கு மேன்மையும் அசையும் அசையா சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாவதை பார்க்கிறோம். அவருக்கு சுக்கிரபகவான் (பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி) ஆவதால் சுக்கிரபகவானின் தசையில் வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் உண்டாகும். 
மேலும் பதினொன்றாம் வீட்டில் கேதுபகவான் இருப்பது உயர்வென்று ஜோதிட நூல்கள் சிலாகித்துக் கூறுகின்றன. பொதுவாக, பித்ரு தோஷம் உண்டாகி பித்ரு ஸ்தானமும் சூரியபகவானும் பலம் குறைந்து லக்னம், பூர்வபுண்ணியம் ஆகிய திரிகோண ராசிகளும் அசுபக் கிரகங்களால் சூழப்பட்டு எந்தவித நிவர்த்தியும் ஏற்படாமல் போயிருந்தால் அந்த குழந்தையை தத்து கொடுக்கலாம் என்று கூறுவார்கள். அதேநேரம் தந்தைக்கு பொருளாதார வீழ்ச்சி, ஆரோக்கிய குறைபாடுகள் திடீரென்று ஏற்பட்டால் அந்த நேரத்தில் குழந்தைக்கும் அனுகூலமற்ற தசாபுக்திகள் நடந்தால் குழந்தையை அவர்கள் குடும்ப வழக்கப்படி இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ தத்து கொடுத்துவிட்டு பின்னர், வாங்கிக்கொள்ளும் ஒரு பழக்கம் உள்ளது. 
உங்கள் பேரனுக்கு எந்தவிதமான அனுகூலமற்ற நிலைமைகளும் இல்லையென்பதை உணர்கிறோம். அதனால் சுக்கிரபகவானின் தசையில் பெற்றோருக்கு எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது. அதனால் வெளியில் எவருக்கும் தத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் மனஅமைதி சம்பந்தப்பட்ட விஷமாக ஆவதால் உங்கள் ஜோதிடர் கூறியபடி முருகப்பெருமானுக்கு தத்து கொடுத்துவிட்டு பின்னர், வாங்கிக்கொள்ளலாம். மற்றபடி உங்கள் பேரனுக்கு எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.


- வெங்கடேசன், பெங்களூரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT