என் மகள், பேரன் ஜாதகங்களை இணைத்துள்ளேன். அவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? மகனின் ஆதரவு என் மகளுக்கு கடைசிவரை கிடைக்குமா? அவர்களின் குடும்பம் சிறப்பாக வரவேண்டும். பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா?
வாசகர், திருநெல்வேலி.
உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சூரிய பகவானுடனும், குரு பகவானுடனும் இணைந்து பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் துலாம் லக்னத்திற்கு ராஜ யோக காரகராகி களத்திர நட்பு ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். லக்னத்தில் சிவராஜ யோகமும் உண்டாகிறது. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியை சம சப்தமமாகப் (சந்திர மங்கள யோகம்) பார்வை செய்கிறார். தற்சமயம் நடப்பதும் சுக்கிர பகவானின் தசையாக இருப்பதால் மண வாழ்க்கை, பொருளாதாரம் இரண்டும் சீராகவே செல்லும். மகனாலும் நன்மைகள் உண்டாகும்.
உங்கள் பேரனுக்கு மீன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சந்திர பகவான் லக்னத்தில் இருப்பது சிறப்பு. லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றுள்ள சனி பகவானையும், லக்னத்தையும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் (கஜகேசரியோகம்) ஒன்பதாம் பார்வையாக தைரிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். சுக ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்களைக் கொடுக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருப்பதை "சதுர் கேந்திர யோகம்' என்கிறோம். தற்சமயம் விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானின் தசை நடப்பதால் வேலையில் நல்ல படியாக முன்னேறி விடுவார். பெற்றோருக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.