விரைவில் திருமணம் கைகூடும்
என் மகனுக்கு எப்பொழுது திருமணமாகும்? மத்திய அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்?
என் மகனுக்கு எப்பொழுது திருமணமாகும்? மத்திய அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்?
-வாசகர், ராமநாதபுரம்.
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம் (மேஷ லக்னம் அல்ல), தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில், தனாதிபதியான புதபகவானுடனும், சுகாதிபதியான சூரிய பகவானுடனும் இணைந்திருக்கிறார். இதனால் புத ஆதித்ய யோகம், மஹா விஷ்ணு, மஹா லட்சுமி யோகம் ஆகியவைகள் உண்டாகின்றன. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்றமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். இதனால் மஹா கீர்த்தி யோகம் உண்டாகிறது. தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து, அவரின் ஐந்தாம் பார்வை சுகஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (குருச் சந்திரயோகம்) படிகிறது. ராகு பகவான் போக காரகராகி, லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சந்திர மஹாதசை நடப்பதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு வேலை கிடைக்கும். இந்தக் காலகட்டத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
Advertisement