எனது திருமணம் தள்ளிப் போவதற்கு காரணம் என்ன? பித்ரு தோஷம் உள்ளதா? எப்பொழுது திருமணம் நடக்கும்?
எனது திருமணம் தள்ளிப் போவதற்கு காரணம் என்ன? பித்ரு தோஷம் உள்ளதா? எப்பொழுது திருமணம் நடக்கும்?
எனது திருமணம் தள்ளிப் போவதற்கு காரணம் என்ன? பித்ரு தோஷம் உள்ளதா? எப்பொழுது திருமணம் நடக்கும்? பூர்வீகச் சொத்து கிடைக்குமா? அதை அனுபவிக்கும் யோகம் உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்..?
-வாசகர், குடியாத்தம்.
உங்களுக்கு மகர லக்னம், கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று, சசமஹா யோகமும் பெற்றமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார்.
Advertisement
ராசியில் பலம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் பலமிழப்பது குறை. இதை "அவயோகம்' என்று கூறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்னை உண்டாகும். கடினமாக உழைத்து, பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றி பெற முடியும். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று, மாளவிகா யோகத்தையும் பெற்று நவாம்சத்தில் உச்சமடைகிறார்.
இதனால் மகிழ்ச்சிகரமான குடும்பச் சூழ்நிலை, நல்ல வாழ்க்கைத் துணை, நன்மக்கட் பேறு, கல்வி மேம்பாடு ஆகியவையும், அரசாங்க ஆதரவு, புகழ், செல்வம், செல்வாக்கு ஆகியவைகளும் உண்டாகும்.
ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஒன்பதாம் வீட்டிலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
இதனால் எல்லாவித நற்பாக்கியங்களும் உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பு கூடும். வாழ்க்கையில் உன்னத நிலையும் உண்டாகும். உங்களுக்கு மூன்று திரிகோணாதிபதிகளும் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார்கள் என்று கூறவேண்டும்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், பன்னிரண்டாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று நவாம்சத்தில் உச்சமடைகிறார். இதனால் கடுமையாக உழைத்து பொருள் திரட்ட வேண்டியிருக்கும்.
நல்ல காரியங்களுக்குச் செலவு செய்கிற மனப்பான்மை உண்டாகும். சுறுசுறுப்பாகச் செயல்படுகின்ற தகுதி உண்டாகும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஆயுள் ஸ்தானத்தின் மீதும் படிகிறது.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் (சர லக்னத்திற்கு பாதகாதிபதி) பன்னிரண்டாம் வீட்டில் குரு (குரு மங்கள யோகம்) பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு.
ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியையும், கேது பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியையும் அடைகிறார்கள். பொதுவாக திருமணத்திற்கு களத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானாதிபதி, ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டிற்கதிபதி, இரண்டாம் வீடு, இரண்டாம் வீட்டிற்கதிபதி, லக்னம், லக்னாதிபதி, பன்னிரண்டாம் வீடு ஆகிய வீடுகள் குறிப்பாக சுப பலம் பெற்றிருக்க வேண்டும்.
இதில் ஒன்றிரண்டு நிலைமைகள் பலம் குறைந்திருக்கும் பட்சத்தில் திருமணம் தாமதமாகும். மேற்கூறிய குறிப்புகளை ஆராய்ந்தால் உங்களுக்குத் திருமணம் தாமதமாகும் என்று கூறவேண்டும். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில், சுக்கிர பகவானின் புக்தி இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும்.
களத்திர ஸ்தானாதிபதி, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம் அசுப பலம் பெற்றிருப்பதற்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண்ணாகப் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி பாக்கிய ஸ்தானம், பித்ரு காரகர் சூரிய பகவான் சுபமாக இருப்பதால் பித்ரு தோஷம் இல்லை.
பூர்வீகச் சொத்து கிடைத்து, அதை அனுபவிக்கும் யோகமும் உள்ளது. தற்சமயம் ஏழரை நாட்டுச் சனியில் பொங்கு சனி (இரண்டாம் சுற்று) நடப்பதால் செய்தொழிலில் ஏற்றங்கள் உண்டாகும்.
நல்ல வருமானம் வரக்கூடிய உயர் பதவிகளையும் பெற்று விடுவீர்கள். மேற்கூறிய காலகட்டத்திற்குள் வெளியில் கொடுத்திருக்கும் பணமும் சிறிது சிறிதாகக் கை வந்து சேரும்.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் வடகிழக்கு திசையிலிருந்து (தனியார் துறையில் வேலை பார்ப்பவர்) அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.