முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

தண்டுவடம் சீரடையும்! 

என் இரண்டாவது மகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடி படிக்கட்டுகளில் விழுந்து (முதுகுத் தண்டில் பிரச்னைகள், வலிகள்) அறுவை சிகிச்சை, அக்குபஞ்சர் என எல்லா முயற்சிகளைச் செய்தும் பயனில்லை. தற்சயம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

என் இரண்டாவது மகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடி படிக்கட்டுகளில் விழுந்து (முதுகுத் தண்டில் பிரச்னைகள், வலிகள்) அறுவை சிகிச்சை, அக்குபஞ்சர் என எல்லா முயற்சிகளைச் செய்தும் பயனில்லை. தற்சயம் மெடியோகாவில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று வருகிறார். எவ்வளவோ பணம் விரயம் ஆனது. நாங்கள் அவரின் தயவில் வாழ்கிறோம். எங்கள் மகளின் நாளைய நிலை என்ன? திருமண பாக்கியம் உண்டா? பரிகாரம் தேவையா?

-மோகன் பாபு, பெரும்பாக்கம்.

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில், தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.

Advertisement

குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீதும், அங்கு சுய சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடையும் ஆட்சி பெற்ற சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானம், அயன ஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் துலாம் ராசியை அடையும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார்.

குரு பகவானின் ஏழாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், குரு பகவானின் ஒன்பதாம் பார்வை லக்னத்தின் மீதும் படிகிறது. பொதுவாக குருபலம் பெற்றிருந்தால் ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். பெற்றோருக்கும் அவரால் ஆதரவு உண்டாகும். 

அதோடு தர்ம குணம், அறிவாற்றல், பணப் புழக்கம், சத்புத்திர யோகம் ஆகியவையும் உண்டாகும்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டுக்கும் அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார்.

பஞ்ச பூதங்களை வெளிப்படுத்தும் கிரக நாதர்கள் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் நாம் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். எந்தக் கிரகம் வலு குறைந்திருக்கிறதோ, அந்தக் கிரகத்துக்குரிய உடல் பகுதி, அந்த கிரகத்தின் தத்துவத்துக்கேற்ப பாதிக்கப்படும். 

எந்தக் கிரகம் வலு அதிகம் பெற்றிருக்குமோ, அதன் தத்துவத்துக்கேற்ப உடலியக்கக் கூறுகளின் சக்தி கூடும். சூரிய பகவான் பலம் குறைந்திருந்தால் ஜுரம், உஷ்ணாதிக்கம் ஏற்படுதல், தலை சம்பந்தப்பட்ட கடுமையான வலி, சந்திர பகவான் பலம் குறைந்திருந்தால் நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட வியாதிகள், செவ்வாய் பகவான் பலம் குறைந்திருந்தால் உடற்காயங்கள், புண்கள், கட்டிகள், புத பகவான் பலம் குறைந்திருந்தால் பேச்சுத் திறனற்றுப் போகும். திக்கித் திக்கிப் பேசுவார், சிந்தனை ஆற்றல் குறையும், பேச்சுக்கு அடிப்படை ஆதாரமான உறுப்புகள் சக்தியற்றுப் போகும். குறிப்பாக மூளையின் ஆற்றல் பாதிக்கவும் கூடும்.

குரு பலம் குறைந்திருந்தால் கண்களின் பார்வை சக்தி குறையும். சுக்கிர பலம் குறைந்திருக்கும் பட்சத்தில் மூளையின் ஆற்றல் குறையும். உடல் பலம் குறைந்து உடலில் வீக்கம் ஏற்படும்.

சனி பலம் குறைந்தவர்கள் கை கால்கள் செயலிழக்கப் பெறுவார்கள். பஞ்ச பூதத் தத்துவங்களை விவரிக்கும் குரு, சுக்கிர, சனி, செவ்வாய், புத பகவான்களைத் தவிர சூரிய சந்திர பகவான்கள் தாங்கள் ஆட்சி பெறும் ராசிகளின் தன்மையை ஒட்டி முறையே அக்னி, நீர் - தத்துவங்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

களத்திர நட்பு ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம் மூலத் திரிகோணம் பெற்றிருப்பதால் அங்கு நீச்சம் பெறும் சுக்கிர பகவானுக்கு முழுமையான நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது.

இவர்களுடன் கேது பகவானும் இணைந்திருப்பது சிறப்பு. சுக்கிர பகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியாகி நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். 

நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு புத பகவானும், எலும் பு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சனி பகவானும் காரணமாகிறார்கள்.

லக்னாதிபதி குரு பகவான் ஆறாம் வீட்டோனின் பலத்துக்கு சற்று குறைவான பலம் பெற்றிருக்கிறார் என்றாலும், ஒன்பது மற்றும் பத்தாமதிபதிகள் தங்கள் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதாலும், தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்படுவதாலும், உடல் ஆரோக்கியத்தில் நிரந்தர பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. 

தற்சமயம், குருமஹா தசையில் புத பகவானின் புக்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கும்.

இந்தக் காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சீரடைந்து விடும். 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் படித்த, நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமரை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments