அபிஜித் முகூர்த்தம் 
ஜோதிட கட்டுரைகள்

கேட்டதை அள்ளித்தரும் அபிஜித் முகூர்த்தம்: சூட்சும ரகசியம்!

அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் அள்ளித்தரும் அபிஜித் பற்றி..

ஜோதிடர் பார்வதி தேவி

பிரபஞ்ச சக்தியில் ஜோதிடம் என்பது வானியல், அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மிக சார்ந்த உள்ளடங்கிய ஒன்று. நாம் மொத்தம் 27 நட்சத்திரங்களின் மேல் 9 கிரகங்களின் நகர்வுகளை கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுகிறது. முற்காலத்தில் ஒரு நாடு படையெடுக்கும் நாள் குறிக்க, அரசரின் முடிசூட்டல் மற்றும் மருத்துவம் சார்ந்து விஷயங்களுக்கு ஜோதிடம் பார்ப்பதுண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை ஜோதிடம் என்பது வானியல் ரீதியாக கோள்கள், ஒவ்வொரு ராசி மண்டலங்களின் மேல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருவரின் பிறப்பு மற்றும் எதிர்கால நிகழ்வுகளை கணிக்கப்படுகிறது.

எந்த ஒரு நல்ல செயலை துவங்கும் முன்பும் நல்ல நாள் பார்ப்பது வழக்கம். அந்த நாள் வெற்றி திருநாளாக இருக்க வேண்டும். அனைவரும் இதற்கு ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் அவரவர் பிறந்த நட்சத்திரங்கள் கொண்டு சுப முகூர்த்த நாள்களை குறிக்கின்றோம். இந்தக் குறிப்பிட்ட நாள் முகூர்த்த நாளாக முக்கியமாகக் காலை வேளையாக இருக்க வேண்டும். அப்பொழுது நாம் செழுமையாக வாழ்வோம் என்பது நம் பெரியோர்களின் நம்பிக்கை. ஒருசில மாதத்தில் நல்ல சுப நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நாள் அமையாது. அதற்கு சரியான தீர்வு என்றால் அபிஜித்.

அபிஜித் என்றால் வெற்றி, ஜெயம் என்று பொருள். ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும். அபிஜித் என்றால் அஜேயன், யாராலும் வெல்ல முடியாத ஒரு சக்தி. இதில் தொடங்கப்படும் செயல்கள் தடை இல்லாமல் வெற்றி பெறும் என்பது சூட்சும விதி. பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் ஒருமுறை வருவது அபிஜித் நட்சத்திரம். இது மிகவும் தலையாய சிறந்த நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. கடவுளின் படைப்பில் எல்லா நாள்களும் நல்ல நாள்களே என்று சொல்லும் அளவுக்கு அபிஜித் முகூர்த்தம் ஒவ்வொரு நாளிலும் ஒரு முக்கிய முகூர்த்தமாக மறைக்கப்பட்டுள்ளது. அபிஜித் நட்சத்திரம் மற்றும் அபிஜித் முகூர்த்தம் இரண்டுமே முக்கிய பிரம்மாஸ்திரங்கள்.

முக்கியமாக நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தில், சூரிய உதயத்திற்குப் பிறகு 30 முகூர்த்தங்களாகப் பிரிக்கின்றனர். அவற்றில் முக்கியமாக 28வது முஹூர்த்தம் - காலை பிரம்ம முஹூர்த்தம், மதியம் பொழுதில் வரும் சக்திவாய்ந்த 8வது முஹூர்த்தம் அபிஜித் என்று சொல்லப்படுகின்றது. அதனால் தான் இன்றும் ஒருசிலர் தினமும் வீட்டில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு வரும் ஒன்றரை மணி நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். இவற்றில் மதியம் வரும் அபிஜித் முக்கியமான சுப முகூர்த்தம். நாம் சில நேரங்களில் காலை வரும் பிரம்ம முகூர்த்தத்தை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் தினமுமே வரும் அபிஜித் முகூர்த்தத்தையும் மற்றும் மாதம் ஒருமுறை வரும் அபிஜித் நட்சத்திரத்தையும் சூட்சுமமாகப் பயன்படுத்தலாம். இதற்கு அதீத சக்தி உண்டு.

அபிஜித் நட்சத்திரம்

அனைவருக்கும் தெரிந்தது அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள். ஆனால் முற்காலத்தில் 28வது நட்சத்திரமும் ஒன்று இருந்தது. அந்த 28வது நட்சத்திரம் விண்வெளியில் சுடர் விட்டு ஒளிரும் அபிஜித் நட்சத்திரம். இப்போது இந்த நட்சத்திரம் பயன்பாட்டில் இல்லை. ஆனால் அது பஞ்சாங்கம் காலண்டர்களில் கணக்கிடலாம். இது அதி சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பது மறைக்கப்பட்ட உண்மை. இந்த நட்சத்திரம் ரிஷிகள், முனிவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. அபிஜித் என்ற நட்சத்திரம் மகர ராசியில் - உத்திராடம் 3, 4ம் பாதம் மற்றும் திருவோணம் 1,2ம் பாதத்திற்கு இடையில் இருப்பது அபிஜித் நட்சத்திரம் ஆகும். இது மகர ராசியில் 276.40' முதல் 280.53' பாகை வரை அபிஜித் நட்சத்திரம் ஆகும்.

இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு தோஷமே இருந்தாலும் வெற்றியை சூடுவார்கள். இது ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய முக்கியமான பலம் பொருந்திய நட்சத்திரம். தற்பொழுது இந்த நட்சத்திரம் மறைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் இந்த நட்சத்திரம் தற்பொழுதும் ஒரு சில ஜோதிடரின் பயன்பாட்டில் உள்ளது. இந்த அபிஜித் முஹூர்த்தம் பற்றி மகாபாரத காலகட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. பாண்டவர்களின் ஐவரில் ஒருவரான இளையவன் சகாதேவன் மிகச்சிறந்த ஜோதிட வல்லமை பெற்றவர். சகுனியின் சூட்சுமத்தால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மகாபாரத போர் துவங்க சகாதேவன் இந்த அபிஜித் முகூர்த்தத்தைக் குறித்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் ஒரு சூட்சும சக்தி உள்ளதை அறிந்தார் கிருஷ்ண பகவான். கலியுகத்தில் இதனைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நட்சத்திரத்தை நட்சத்திர மண்டலத்திலிருந்து எடுத்து தன் கீறிட மயிற்பீலிக்குள் மறைத்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

மாதத்திற்கு ஒருமுறை வரும் அபிஜித் நட்சத்திர காலத்தில் அவரவர் குலதெய்வத்தை அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்கினால் நீங்கள் கேட்ட வரம் அனைத்தும் கிட்டும். சிலருக்கு பலமுறை பரிகாரங்கள் செய்தும் தீர்வு கிடைக்காதவர்கள். இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பரிகாரங்களைச் செய்தால் தோஷ நிவர்த்தி அடைய முடியும். வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் நட்சத்திர காலத்தைப் பயன்படுத்தலாம். இது அனைத்துவித துவக்கங்களுக்கும், வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருக்கும். இந்த அபிஜித் நட்சத்திரம் பிரம்மனுக்கு கூறியதாகக் கூறப்படுகிறது. அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையான பிரம்மாவின் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறந்தது. இந்த அபிஜித் நட்சத்திரத்தின் பிரத்யதி தேவதையாக ஸ்ரீ நரசிம்மரும் ஆவார்.

அபிஜித் முஹூர்த்தம்

நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு செயலை செய்யும் பொழுது அவர்களுக்கு சரியான முகூர்த்தம் கிடைக்காது. அன்றைய காலகட்டத்தில் தீதுரு நட்சத்திரம், கரிநாள், அஷ்டமி, நவமி, சந்திராஷ்டமம் மற்றும் ராகுகால எமகண்டம் வந்துவிடும். அதனால் அந்த செயலை செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்போம். அதற்கு ஒரு சரியான தீர்வு அபிஜித் முகூர்த்தம். ஒவ்வொரு நாளும் மதியம் வரும் உச்சி காலத்தில் அபிஜித் முகூர்த்தம் குறிக்கப்படும். இந்த அபிஜித் முகூர்த்த காலத்தை எல்லாவித பஞ்சாங்கக் நாள்காட்டிகளில் கணிக்கமுடியும். இந்த முகூர்த்த காலத்தில் எந்த செயல் செய்தாலும் வெற்றி நிச்சயம். ஒருவருக்கு கிரகங்களோ, திதியோ கரணமோ, யோகமோ சாதகமாக இல்லாமல் இருக்கும் காலத்தில் அபிஜித் முகூர்த்தத்தை நாம் பயன்படுத்தி நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் தாரா பலன் சரியில்லை என்றாலும் பரவாயில்லை அன்று முகூர்த்த தேதியைக் குறித்துக் கொள்ளலாம்.

அபிஜித் முகூர்த்தம் என்பது பகல் பொழுதில் காலையில் சூரிய உதய காலத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் அபிஜித் காலம். ஒரு நாளின் மொத்த நேரம் = 60 நாழிகை = 24 மணி நேரம், அதில் 28 நட்சத்திரங்கள். 1 நட்சத்திர நேரம் = 60 ÷ 28 = 2.14 மணி நேரம். இதில், முதலில் 15வது இடம் வரும் நட்சத்திரமே அபிஜித். அபிஜித் முகூர்த்தமும் தோஷம் நீக்கி சுப காரியம் செய்தால் வெற்றி ஜெயம் உண்டாகும். இந்த வெற்றிக்கு உரிய நட்சத்திரத்தை தென் இந்தியாவை விட, வட இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அபிஜித் முகூர்த்தத்தில் தான் அயோத்தியில் குழந்தை ராமருக்குப் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த அபிஜித் எல்லாவித ராசிக்காரர்களும் மற்றும் எல்லாவித நட்சத்திரக்காரர்களுக்கும் பொதுவான சிறந்த வெற்றிவாகை சூடக்கூடிய முகூர்த்தம் ஆகும். முகூர்த்த நேரம் பார்த்து வேலை செய்ய முடியாத சூழலில் இதைத் தேர்வு செய்யலாம். அசாத்தியமான, அபரிமிதமான வெற்றியைத் தரும் முகூர்த்தம்.

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நேரத்தை 2 சமமான பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். இந்த நேரத்தின் நடுப் பகுதியிலிருந்து 24 நிமிடங்கள் முன்னும் பின்னும் சேர்த்துக் கிடைப்பதே அபிஜித் முகூர்த்தம். சூரியன் உச்சம் பெரும் உச்சி காலமான பகல் பொழுதான 11.45 முதல் 12.15 வரை உள்ள அபிஜித் முஹூர்த்தம் ஆகும். ஒவ்வொரு நாட்டின் சூரிய உதயத்தைப் பொறுத்து அபிஜித் முஹூர்த்த நேரம் சிறிது நிமிடங்கள் மாறுபடும்.

அபிஜித் முஹூர்த்தம் என்பது மிகச் சிறந்த, அசாதாரணமான, தீய சக்திகளை நீக்கும், வெற்றி தரும் சக்திவாய்ந்த முஹூர்த்தம். இது தினமும் பிறந்த நட்சத்திரம், நாள், ராசி போன்றவற்றை விட மேலானது. மிகக் கடினமான வேளைகளிலும், சாதகமான நேரம் கிடைக்காதபோது, அபிஜித் முஹூர்த்தம் என்ற ஒரு வழி உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த நேரம் தோஷங்கள் அசுப கிரகங்களின் தாக்கம், துஷ்ட சக்திகள் ஆகியவற்றின் பாதிப்பில் இருப்பவர்களுக்கு இது உகந்த நேரம். இந்த நேரத்தில் வீடு அடிக்கல் நாட்டுதல், சொத்து வாங்குவதற்கு முன்பணம் கொடுத்தல், திருமணப் பேச்சுவார்த்தை, ஹோமம், புதிய வேலையின் ஆரம்பம், வாகனம் வாங்குதல், பத்திரம் பதிவு செய்தல், சேமிப்பு /பங்குச்சந்தை துவங்குவதில், மருத்துவச் சிகிச்சை, ஒப்பந்தம், குழந்தைப் பெயர் சூட்டுதல், தூரப் பயணம் மற்றும் முக்கிய சுப காரியங்கள் செய்தல் இரட்டிப்பு பலனும், துர் தடைகள் நீங்கும்.

அபிஜித் முகூர்த்தம் மற்றும் அபிஜித் நட்சத்திரம் இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையை வெற்றியை நோக்கிப் பயணிக்கும் முக்கிய சூட்சும விதி. முன்னோர்களால் மறைக்கப்பட்ட இந்த ஆயுதத்தைச் சரியாக நற்காரியங்களுக்கு பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். இவற்றை துர்காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒருவரின் வாழ்வில் சீராக வளம் பெற பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதும் அபிஜித் நட்சத்திரம் / முகூர்த்தத்தில் கடவுளை வழிபடுவதும் முக்கியமான வெற்றியின் சூட்சுமம். இது ஒருவரின் தோஷம் மற்றும் கர்மா ஒவ்வொரு நாளும் குறைக்கப்படும். இந்த அவசரக் காலத்தில் இதற்காக அன்றைய பஞ்சாங்கத்தைப் பார்க்காமல் மதியம் பகல் உச்சிக்கால 12 மணி என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு நாளும் இந்த உச்சிக்கால 12 மணிக்கு உங்களால் முடிந்த உணவு அல்லது மருத்துவ உதவியைச் செய்தால் அன்றைய செயல் தடையைக் களைந்து வெற்றி வாகை சூடுவீர்.

vaideeshwra2013@gmail.com

தொலைபேசி: 8939115647

About Abhijith, who brings luck and success..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக சதம் விளாசிய ஜோ ரூட்!

டிசம்பர் மாதப் பலன்கள் - கன்னி

டிசம்பர் மாதப் பலன்கள் - சிம்மம்

அமெரிக்காவில் 5 ஆண்டுகளில் 62 இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு! மத்திய அரசு தகவல்!

டிசம்பர் மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT