2030-க்குள் 7 லட்சம் வீடுகள், உயர் கல்வி... 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்!
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது பற்றி...
தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லத் திட்டம் மூலமாக வீடு இல்லாதோருக்கு 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 'தமிழ்நாடு 2030, கனவுகள் மெய்ப்படும்' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்து வருகிறார்.
கல்வி, தொழில், விவசாயம் என 14 துறைகளின் கீழ் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி என்பதன் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தமாக 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.
2030 ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) ஆய்வகம் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். அனைவருக்கும் கல்வி என்ற சூழலை உருவாக்குவோம்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1,000 மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்.
ஜவளி ஆடை, தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உறுதிபடுத்தப்படும்.
சிறுபான்மையினர் கடன் பெறும் முறை எளிதாக்கப்படும்.
2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரமே நம் இலக்கு
3 கோடி லிட்டர் பால் உற்பத்தி 2030ம் ஆண்டில் 4.5 கோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.