பிரபலங்கள் - புத்தகங்கள்

'தி ஹன்ரட்': அந்த 100 பேர் - மணவை முஸ்தபா

மணவை முஸ்தபா

இளம் வயதுமுதலே நூல்களைப் படிப்பதில் ஆர்வம் அதிகம்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பு முடித்தவுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சென்று மேற்படிப்பைத் தொடர்வதற்கு அடிப்படைக் காரணமே அங்கிருக்கும் மாபெரும் நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்திப் பெரும் பயன் பெற வேண்டும் என்ற அடங்கா வேட்கைதான்.

இன்று வரை நான் படித்த நூல்களில் எத்தனையோ என் மனத்தில் முத்திரைப் பதித்திருந்தாலும் 1979-இல் நான் படித்த அந்த ஒரு நூல் என் நெஞ்சில் எந்நேரமும் நிழலாடிக்கொண்டே உள்ளது. அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் என் சிந்தனைக்கும் செயலுக்கும் ஒருவகை ஊக்கியாக உந்து சக்தியாக அமைந்துள்ளதென்றே கூற வேண்டும்.

 அது புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் எழுதிய 'தி ஹன்ரட்' (THE 100) என்ற நூலாகும். (A RANKING OF THE MOST INFLUENTIAL IN HISTORY).

1978-இல் வெளியான அந்நூலை 1979-இல் லண்டன் சென்றிருந்தபோது நண்பர் ஒருவர் எனக்குக் காட்டினார். லண்டன் கடைகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நண்பரும் படிக்கத் தந்தாரே தவிர என்னுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்நூலில் உள்ள அடக்கமும் எழுதியிருந்த முறையும் ஆராய்ச்சிப் பாங்கும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. நூலின் பொருள் இது தான். 1975- வரை உலகில் தோன்றிய மாமனிதர்களில் தங்களது தனித்த செல்வாக்கால் - தாக்கத்தால் உலகின் வரலாற்றுப் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றி, புதிய வரலாறு படைத்தோரில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை அவர்தம் தகுதிக்கேற்ப வரிசைப்படுத்தியிருந்தது அந்நூல். இந்த வரிசை முறை அமைப்பும் நூலின் உள்ளடக்கமும், நடுநிலையான ஆய்வும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடும் விவாதத்தை அப்போது ஏற்படுத்தியிருந்ததில் வியப்பில்லை.

ஜப்பான் செல்லும் வழியில் ஹவாயில் தங்கியிருந்தபோது ஒரு புத்தகக் கடையில் அந்த நூல் கிடைத்தது. வாங்கி ஆர்வப்பெருக்கோடு மீண்டும் படித்து முடித்தேன். அப்போது எனக்கு ஒருவித மலைப்பும்  திகைப்புமே ஏற்பட்டது. ஆயிரம் நூல்களைப் படித்த மன உணர்வு ஏற்பட்டது. அனைத்துத்துறை மேதைகளைப் பற்றியும் அலசி ஆராயும் அந்நூலில் அதிகம் இடம் பெற்றவர் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்களாவர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராயாமல் அவர்களின் சாதனை பற்றிய ஆய்வாக அமைந்திருந்தது. ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கொண்டு ஒரு நடுநிலை ஆய்வோடு எழுதப்பட்ட நூல் அது.

நூலாசிரியர் யூத சமயத்தைச் சார்ந்தவராயிருப்பினும் உலக வரலாற்றையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்த நூறு உலக மாமனிதர்களில் நபிகள் நாயகத்துக்கு முதலிடமும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த ஐசக் நியூட்டனுக்கு இரண்டாவது இடமும் அணுக்கட்டமைப்பைக் கண்டறிந்து கூறிய நீல் போஹ்ருக்கு நூறாவது இடமும் அளித்திருந்தார். இந்தியர்களின் புத்தர், அசோகர், மகாவீரர் ஆகிய மூவருக்கு மட்டுமே  இடமளித்திருந்தார். உலகப் பெரும் தீங்காளன் ஹிட்லருக்கு இடமளித்தவர் அண்ணல் காந்தியடிகளுக்கு இடமளிக்காதது பெரும் நெருடலாக இருந்தது. 'தி ஹன்ரட்'  நூலைப் பற்றிய என் கண்ணோட்டங்களையும் நூலில் நான் கண்ட குறை, நிறைகளையும் அவருக்கு விவரித்துக் கடிதம் எழுதியிருந்தேன். என் விமர்சன முறை அவருக்குப் பிடித்திருக்கவே அவர் உடனடியாக பதில் எழுதத் தவறவில்லை. அடுத்தமுறை நான் அமெரிக்கா சென்றபோது அவரை நேரில் சந்திக்க விரும்பியபோதிலும் கால அவகாசம் கிடைக்காமல் போனதால் அனன்டேலில் இருந்த அவருடன் தொலைபேசியில் என் நிலையைக் கூறினேன். நீங்கள் வராவிட்டால் என்ன? நான் வந்து சந்திக்கிறேன் என்று கூறியபடி பால்டிமோர் வந்து என்னைச் சந்தித்து அளவளாவினார். அவரது எளிமையும் அவர் என் மீது கொண்டிருந்த அன்பும் மதிப்பும் என்னை நெகிழச் செய்துவிட்டது.

அப்போது 'தி ஹன்ரட்' நூலைப் பற்றி விரிவாக விவாதித்தோம். நூலில் காந்தியடிகளைச் சேர்க்காத மனக்குறையை அவரிடம் வெளியிட்டபோது, ''காந்தியடிகள் இந்திய வரலாற்றை, ஓரளவு ஆசிய வரலாற்றை மாற்ற முடிந்ததே தவிர உலக வரலாற்றை ஒட்டுமொத்தமாக மாற்ற இயலவில்லை. உலக மனிதர்களில் மிகச்சிறந்த மனிதர் என்ற அளவுகோலை நான் கைகொண்டிருந்தால் காந்தியடிகளுக்கே நூலில் முதலிடம் வழங்கியிருப்பேன். தனி மனித சாதனை என்ற அளவுகோலைக் கொண்டு அளப்பதாய் இருந்தால் இந்தியாவின் தென்கோடியிலிருந்து வடகோடி இமயம் வரை சென்று ஹிந்து சமயத்தை வளர்த்த ஆதிசங்கரரை முதலாமவராகத் தேர்ந்தெடுத்திருப்பேன். தன் செல்வாக்கால், தாக்கத்தால் உலக வரலாற்றை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்தவர் - இன்றும் தன் தாக்கத்தால் மாற்றிக்கொண்டிருப்பவர், நாளைய வரலாற்றையும் மாற்றக் கூடிய வல்லமை மிக்க தாக்கம் உள்ளவர் என்பதனாலேயே முஹம்மது நபிக்கு என் நூலில் முதலிடம் தந்துள்ளேன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்ந்து சிந்தித்துத் தெளிந்ததால் ஏற்பட்ட முடிவு இது'' என்று சொல்லி முடித்தார்.

ஏராளமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் 'நூறு பேர்'   என்ற தலைப்பில் தமிழிலும் வெளிவந்துள்ளது என்பது உவகை தரும் விஷயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT