வர்த்தகம்

2016 மோட்டார் வாகன துறைக்கு பரபரப்பான ஆண்டு!

DIN

2016-ஆம் ஆண்டு இந்திய மோட்டார் வாகனத் துறை பரபரப்பு நிறைந்ததாகவும், சவால் மிகுந்ததாகவும் இருந்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. இருப்பினும், எத்தகைய சோதனைகளையும் எதிர்கொண்டு நிலைத்திருக்க கூடிய தன்மை இந்திய மோட்டார் வாகனத் துறைக்கு உண்டு என்பது மீண்டும் வெளிப்படையாகி உள்ளது.

மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில், சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் 108 அதிநவீன தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின. இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே, மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை விஸ்வரூபமெடுத்ததையடுத்து, டீசல் வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தலைநகர் புது தில்லியில் 2,000 சிசி மற்றும் அதற்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் என்ஜின் வாகனங்களுக்கு எட்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தடையால், ரூ.4,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக வாகன மாசுபாட்டைத் தடுக்க பாரத் ஸ்டேஜ்-6 விதிமுறைகளை 2020-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நிறுவனங்கள் அதற்கேற்ற வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலையில், பாரத் ஸ்டேஜ்-4 விதிமுறை அமலில் உள்ளது.
2017-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் மோட்டார் வாகன பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இனி வெளிவரும் அனைத்து புதிய மாடல் வாகனங்களும் விபத்துக்கால பரிசோதனையில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள 2018 அக்டோபர் மாதம் வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் கொள்கை அளவில் பல மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக கருதப்படுவதால் அடுத்த ஆண்டும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவாலானதாகவும், சுவாரஸ்யமிக்கதாகவும் இருக்கும் என்று நம்பலாம்.
கரன்ஸி அறிவிப்பு எதிரொலி: உயர் மதிப்பு கரன்ஸி செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து உள்நாட்டுத் தேவையில் தாற்காலிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலை 2017- மார்ச் மாதம் வரை தொடரும். அதன் பிறகு, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் வினோத் தாசரி தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டைப் பொருத்தவரையில், மோட்டார் வாகன விற்பனை பொதுவாக சிறப்பாகவே இருந்தது. ஆனால், உயர் மதிப்பு கரன்ஸி செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால் வாகன விற்பனை திடீரென மந்தமடைந்தது. நவம்பரில் மொத்த வாகன விற்பனை 5.5 சதவீதம் சரிவடைந்தது.
ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் உள்நாட்டில் மோட்டார் வாகன விற்பனை 11.4 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதேசமயம், கரன்ஸி விவகாரத்துக்கு முன்பான ஜனவரி-அக்டோபர் வரையிலான கால அளவில் இதன் வளர்ச்சி 13.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகத் திறன் உள்ள பயணிகள் வாகனங்களுக்கு உள்கட்டமைப்பு வரி விதிப்பை அறிவித்த போதிலும், கிராமப் பகுதிகளில் வாகனங்களுக்கான தேவை சூடுபிடித்தது, சாதகமான பருவநிலை ஆகியவற்றால் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது.
தில்லியில் பழைமையான வாகனங்களை இயக்க விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து பழைய வாகனங்களைக் கொடுத்து புதிய வாகனங்களை வாங்குவோருக்கு அதன் விலையில் 8-12 சதவீதம் வரை ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது புத்துணர்ச்சியை கொடுத்தது.
அதேசமயம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் ஊக்கத் தொகை குறைக்கப்பட்டது என்பது அந்தத் துறை நிறுவனங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
பாரத் ஸ்டேஜ்-6: பாரத் ஸ்டேஜ்-6 தொழில்நுட்பத்துக்காக நிறுவனங்கள் அதிகமாக செலவிட்டு வருகின்றன. இந்த நிலையில், 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வாகனத் துறை நிறுவனங்களின் ஆராய்ச்சி-மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 200 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், 2020-இல் இந்த ஒதுக்கீடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவு, வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைத் தயாரிப்பதில் நிறுவனங்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. அதன் விளைவாக, இருசக்கரம், கார், பேருந்து உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களைத் தயாரித்து அறிமுகப்படுத்துவதில் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
விலையேற்றம்: மூலப் பொருள் விலை உயர்வு, அன்னியச் செலாவணியில் காணப்படும் ஏற்றத் தாழ்வு உள்ளிட்டவற்றின் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் கார்களின் விலையை அதிகரிக்க ஹுண்டாய், ரெனோ, நிஸான், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்து ஏற்கெனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே, கரன்ஸி விவகாரம் காரணமாக நாடு தழுவிய அளவில் நிதி தட்டுப்பாடு ஏற்படுள்ள நிலையில் மோட்டார் வாகன விலையை உயர்த்தும் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது ஐயப்பாடாகவே உள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டில் வாகன விற்பனையைப் பொருத்தவரை, இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாருதி சுஸýகி தெரிவித்துள்ளது.
எது எப்படியோ? இந்திய பொருளாதராம் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, நீண்ட கால அடிப்படையில் மோட்டார் வாகனத் துறைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவே உள்ளது.
குறுகிய மற்றும் நடுத்தர கால அடிப்படையில், மோட்டார் வாகனத் துறைக்கு பாதிப்பு இருந்தாலும், எதிர்காலம் நிலையானதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும் என்பது இத்துறை ஆய்வாளர்களின் கருத்து.
மாசுக் கட்டுப்பாடு, பாதுகாப்பு விதிமுறை என அனைத்து பிரச்னைகளையும் சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு மீண்டு வரும் திறன் இந்திய மோட்டார் வாகனத் துறைக்கு இயல்பாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

- அ.ராஜன் பழனிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT