வர்த்தகம்

பங்குச் சந்தை வர்த்தகத்தில் மந்த நிலை

DIN

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மந்த நிலை காணப்பட்டது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸில் 52 புள்ளிகள் குறைந்து 27,236 புள்ளிகளாக நிலைத்தது.
மூலப் பொருள் துறையைச் சேர்ந்த உலோகம், எண்ணெய் - எரிவாயு, மற்றும் ஆட்டோ மொபைல், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கித் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளின் விலை சரிவை சந்தித்தன.
நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளியிடப்பட்டு வரும் வேளையில், பங்குச் சந்தையில் அவற்றின் தாக்கம் குறிப்பிடும்படி இருந்ததாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டது. அந்நிறுவனத்தின் நிகர லாபம் 3.6 சதவீதம் அதிகரித்து ரூ. 7,506 கோடியைப் பெற்றதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது அந்த நிறுவனத்தின் பங்கு விலை 3.1 சதவீத அளவுக்கு சரிந்தது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே முக்கிய உடன்பாடு ஏற்பட்டதாக வெளியான செய்தி காலை வர்த்தகத்தில் சாதகமாகப் பிரதிபலித்தது. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் தொய்வு நிலை ஏற்பட்டது. பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 2.14 சதவீதம் சரிந்தது. ஓ.என்.ஜி.சி. பங்கு விலை 1.74 சதவீதமும், அதானி போர்ட்ஸ் பங்கு விலை 1.68 சதவீதமும், எச்.டி.எஃப்.சி. பங்கு விலை 1.02 சதவீதமும் குறைந்தது.
எனினும் மூலப் பொருள் துறையைச் சேர்ந்த அரசு நிறுவனமான என்.டி.பி.சி. பங்குகளுக்கு கூடுதல் வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்கு விலை 3.08 சதவீதம் அதிகரித்தது. ஏஷியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 2.72 சதவீதம் உயர்வு பெற்றது. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் வங்கி, ஐ.டி.சி. ஆகியவற்றின் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடையே வரவேற்பு இருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்ற 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 347.25 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக செபி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 14 புள்ளிகள் குறைந்து வர்த்தக இறுதியில் நிஃப்டி குறியீடு 8,398 புள்ளிகளாக முடிவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT