வர்த்தகம்

4-ஆவது வாரமாக பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

தினமணி

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து நான்காவது வாரமாக வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது.
 சிரியா விவகாரத்தால் அமெரிக்க மற்றும் ரஷிய நாடுகளிடையே ஏற்பட்ட மோதல் போக்கு கடந்த வாரத்தில் உலக பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், மழைப் பொழிவு குறித்த வானிலை மையத்தின் சாதகமான மதிப்பீடு, பணவீக்கம் குறைவு, நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு நிதி நிலை முடிவுகள் உள்ளிட்ட உள்நாட்டு நிலவரங்கள் இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமானதாகவே இருந்தது.
 எதிர்வரும் காலத்தில் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதன் நிதி கொள்கையில் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடையே எழுந்தது. இதையடுத்து, வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.
 அதன் எதிரொலியாக, அந்நிய நிதி நிறுவனங்களும் தங்களின் பங்குக்கு இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து கணிசமான அளவுக்கு முதலீட்டை விலக்கி கொண்டன. மேலும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் லாப நோக்கம் கருதி செயல்பட்டனர். இது, பங்குச் சந்தைகளின் வலுவான ஏற்றத்துக்கு தடைக்கல்லாக மாறியது.
 கடந்த வாரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய நிதி நிறுவனங்கள் ரூ.3,033.72 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக செபி தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, உலோகத் துறை குறியீட்டெண் 4.51 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 4.33 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 4.11 சதவீதமும், தொழில்நுட்பம் 3.73 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 3.17 சதவீதமும் உயர்ந்தன. இவை தவிர, மின்சாரம், ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல் சாதனங்கள், ஐபிஓ துறை பங்குகளுக்கும் அதிக தேவை காணப்பட்டது.
 அதேசமயம், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறித்த அச்சப்பாட்டால், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 2.27 சதவீதமும், வங்கி 1.58 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.43 சதவீதமும், நுகர்வோர் சாதனம் 1.21 சதவீதமும், மோட்டார் வாகன துறை குறியீடெண் 0.07 சதவீதமும் சரிந்தன.
 கடந்த வாரத்தில் சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில் 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது.
 சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நிகர லாபம் 5.81 சதவீதம் அதிகரித்து ரூ.6,925 கோடியை எட்டியதையடுத்து டிசிஎஸ் நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 8.11 சதவீதம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல் 6.07 சதவீதமும், ஐடிசி 5.81 சதவீதமும், பவர் கிரிட் 4.94 சதவீதமும், ஹெச்யுஎல் 3.94 சதவீதமும், கோல் இந்தியா 2.35 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 2.10 சதவீதமும் அதிகரித்தன.
 அதேசமயம், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 6.53 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் டிவிஆர் 5.84 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 5.72 சதவீதமும், எஸ்பிஐ 3.90 சதவீதமும், இன்டஸ்இண்ட் வங்கி 2.54 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.17 சதவீதமும், ஸன் பார்மா 1.52 சதவீதமும், மாருதி சுஸுகி பங்கின் விலை 1.11 சதவீதமும் குறைந்தது.
 மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் அதிகரித்து 34,415 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.16,335.71 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. முந்தைய மூன்று வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,596 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்துள்ளது.
 தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 10,564 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,48,712.79 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிப்பதில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT