வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் தொடர் முன்னேற்றம்: சென்செக்ஸ் 307 புள்ளிகள் அதிகரிப்பு

DIN


இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, வர்த்தக பற்றாக்குறை கணிசமான அளவு கட்டுக்குள் வந்தது, அந்நிய முதலீடு அதிகரிப்பு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. இதன் காரணமாக, அவர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர்.
இதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 2.03 சதவீதமும், எரிசக்தி 1.54 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.34 சதவீதமும், 
மின்சாரம் 1.31 சதவீதமும், உள்கட்டமைப்பு 1.14 சதவீதமும், பொதுத் துறை 1.13 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 0.93 சதவீதமும், வங்கி துறை குறியீட்டெண் 0.56 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், பொறியியல் பொருள்கள், நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளின் குறியீட்டெண் 0.27 சதவீதம் வரை சரிந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 4.10 சதவீதமும், பவர் கிரிட் பங்கின் விலை 3.77 சதவீதமும் உயர்ந்தன.
வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததையடுத்து அந்நிறுவனப் பங்கின் விலை 2.21 சதவீதம் வரை அதிகரித்தது.
இவை தவிர, ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 2.89 சதவீதமும், விப்ரோ, 2.01 சதவீதமும், டாடா ஸ்டீல், கோல் இந்தியா பங்கின் விலை தலா 1.88 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்காத காரணத்தால் கோட்டக் வங்கி, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்யுஎல், ஏஷியன் பெயின்ட், எஸ்பிஐ, எல் & டி நிறுவன பங்குகளின் விலை 2.50 சதவீதம் வரை இறக்கத்தை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 307 புள்ளிகள் அதிகரித்து 36,270 புள்ளிகளில் நிலைத்தது. சென்செக்ஸ் கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் 1,003 புள்ளிகள் உயர்வைக் கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 10,888 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT