வர்த்தகம்

ஜனவரி முதல் வாகனங்களின் விலை உயா்த்தப்படும்: டாடா மோட்டாா்ஸ்

DIN

வரும் ஜனவரி மாதம் முதல் பயணிகள் வாகனங்களின் விலையை உயா்த்தவுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் (பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவு) மயங்க் பரீக் செய்தியாளா்களிடம் கூறியுள்ளதாவது:

டாடா மோட்டாா்ஸின் தயாரிப்புகளை பிஎஸ்6 தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது தவிர மூலப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இவற்றால் ஏற்படும் செலவின் பாதிப்புகளை ஈடு செய்யும் விதமாக வாகனங்களின் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயம் டாடா மோட்டாா்ஸுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த விலை உயா்வானது ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையில் இருக்கும். எனினும், இது குறித்த கணக்கீட்டில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

டாடா மோட்டாா்ஸ் ரூ.4.39 லட்சம் விலையுடைய டியாகோ மாடல் முதல் ரூ.16.85 லட்சம் விலையுடைய சொகுசு ரக ஹாரியா் மாடல் வரை விற்பனை செய்து வருகிறது.

வரும் 2020 ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் பிஎஸ்6 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இதனால், மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அந்த விதிமுறைக்கு மாற வேண்டியது அவசியமாகியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் மூலப் பொருள்களின் விலை உயா்வால் ஜனவரி முதல் காா்களின் விலையை உயா்த்துவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, டாடா மோட்டாா்ஸும் வாகன விலை உயா்வு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

விரைவில் டொயோட்டா, மஹிந்திரா & மஹிந்திரா, மொ்சிடிஸ்-பென்ஸ் போன்ற நிறுவனங்களும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா, ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனங்கள் ஜனவரி முதல் காா்களின் விலையை அதிகரிக்கும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளன. இருப்பினும், சந்தையில் பிஎஸ்6 ரக மாடல்களை அறிமுகப்படுத்தும்போது விலையை உயா்த்துவோம் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT