வர்த்தகம்

ராணிப்பேட்டை சிப்காட் இஎஸ்ஐ மருத்துவமனை: நிறைவேறா எதிர்பார்ப்பில் 50,000 தொழிலாளர்கள் 

பெ.பாபு

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெறுவதில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கும் சிக்கல் காரணமாக ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இஎஸ்ஐ கழகத்தின் சார்பில் 30 படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் (பெண்களின்) மருத்துவ சிகிச்சை கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உன்னதத் திட்டம்தான் இஎஸ்ஐ திட்டம். இந்தத் திட்டம் 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு 66 வது ஆண்டு நிறைவு  விழா கொண்டாடியது.இந்த திட்டத்தில் தமிழகத்தில் சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் 25 அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 10 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 8 மருத்துவமனைகள் தமிழக அரசாலும், 2  மருத்துவமனைகள் மத்திய அரசாலும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரான ராணிப்பேட்டையில் கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவன தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. 
அதைத் தொடர்ந்து, சிப்காட் 1, 2, சிட்கோ 1, 2, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சிப்காட் வளாகத்தில் உருவாகின. மேற்கண்ட தொழிற்பேட்டைகளில் தோல், ரசாயனம், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தோல் பதனிடுதல், தோல் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேற்கண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு தொகையும், அந்தந்த தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் இருந்து ஒரு தொகையும் சேர்த்து மாநில தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்துக்கு (இஎஸ்ஐ) ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து ஒரு பெருந்தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் மாநில ஈட்டுறுதி கழகத்தின் சார்பில் கடந்த 45 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத   பகுதி நேர மருந்தகம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் எவ்வித மருத்துவ சிகிச்சையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், மேற்கண்ட தொழிற்பேட்டையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு விபத்து, மகப்பேறு உள்ளிட்ட அவசரக்கால சிகிச்சை பெற வேலூர், சென்னை போன்ற பகுதிகளுக்குச் சென்று வர வேண்டிய நிலையுள்ளது. அப்படியும் வெளியூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்குரிய செலவுத் தொகையை மாநில தொழிலாளர்கள் ஈட்டுறுதி கழகத்திடம் பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் நாட்டுக்கு கணிசமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய தொழில் நகரமான ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் விபத்து, முதலுதவி உள்ளிட்ட அவசர காலத்துக்கு உதவக் கூடிய ஆம்புலன்ஸ் வசதி இன்றுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து, சிப்காட் , சிட்கோ தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: 
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை தொடங்க சிப்காட் நிர்வாகத்தின் தரப்பில் சுமார் 5 ஏக்கர் நிலம் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் மாநில தொழிலாளர்கள் நல ஈட்டுறுதிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநில ஈட்டுறுதிக் கழகம் அந்த இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியதோடு சரி, இதுவரை எவ்விதப் பணிகளும் நடைபெறாமல் அந்த இடம் புதர் மண்டிக் கிடக்கிறது. 
கடந்த 2011-இல் மாநில தொழிலாளர்கள் நல ஈட்டுறுதிக் கழக கூடுதல் ஆணையர், வட்டார இயக்குநர் மூலம் நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று கிடைக்கப் பெறாத காரணத்தால் மருத்துவமனை தொடக்கப் பணிகள் கால தாமதமாகிறது என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெறுவதில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. 
இதனால் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் மூலம் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தால், தாங்கள் மாத ஊதியத்தில் இருந்து அதற்கான தொகை பிடித்தம் செய்வது எந்தவகையில் நியாயம் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் இஎஸ்ஐ கழகத்துக்கு தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகையை தொழிலாளர்களும், தொழிற்சாலை நிர்வாகத்தினரும் மாதந்தோறும் தவறாமல் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை, ஆம்பூர், திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய ஏழு இ.எஸ்.ஐ. மையங்களைத் தரம் உயர்த்தி 30 படுக்கைகள் உடைய மருத்துவமனைகளாக மாற்றப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இஎஸ்ஐ மருந்தகங்களை தரம் உயர்த்தும் நடவடிக்கைக்கான எந்த பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் இன்றுவரை மேற்கொள்ளவில்லை. 
மேலும் ராணிப்பேட்டையில் 30 படுக்கை  வசதி கொண்ட இஎஸ்ஐ பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இஎஸ்ஐ நிறுவனத்தின் 66ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சென்னை மண்டல துணை இயக்குநர் எஸ்.விஜயன் பேசுகையில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று காரணம் கூறி பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டத்தினை கைவிடும் செயலை விடுத்து, அதற்கான மாற்று இடம் தேர்வு செய்து பல்நோக்கு மருத்துவமனையை உடனடியாக அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT