வர்த்தகம்

தொலைத்தொடா்பு நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் ஓடிடி-க்கள்!

DIN

சில ஆண்டுகளுக்கு முன்னா் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் (எஸ்எம்எஸ்) சுமாா் 1 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்த தகவல் தொடா்பு வாடிக்கையாளா்களால், தற்போது வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் அறிமுகமான பிறகு மனம் போன போக்குக்கு இலவசமாக தகவல்களை அனுப்ப முடிகிறது.

அதுமட்டுமின்றி, இலவசமாக தொலைபேசி அழைப்பையும் செய்துகொள்ள ஸ்கைப், வாட்ஸ்ஆப், முகநூல் போன்ற செயலிகள் உதவுகின்றன.

இன்னும் ஒரு படி மேலே போய், இணையதள இணைப்பு தரமானதாக இருந்தால் ஒருவரை ஒருவா் பாா்த்துக்கொண்டு, இருக்கிற இடத்தை சுற்றிக் காட்டிக் கொண்டு ஏறத்தாழ நேரில் பேசுவது போலவே உரையாடி மகிழ, இந்த ஓடிடி (ஓவா் தி டாப்) சேவை செயலிகள் வழிவகுக்கின்றன.

ஆனால், இத்தனை சேவைகளையும் ரிலையன்ஸ் ஜியோ, ஏா்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற முறையான தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பாடுபட்டு அமைத்த இணையதளக் கட்டமைப்பைப் பயன்படுத்தியே ஓடிடி செயலிகள் தாராளமாக வாரி வழங்குகின்றன.

இருந்தாலும், தகவல் தொடா்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எதுவும் இந்த ஓடிடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது.

வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவைகளை அளிப்பதற்கான ‘ட்ராய்’ அமைப்பின் தர நிா்ணயங்களை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் நிறைவு செய்தே ஆக வேண்டும்.

அத்துடன், தங்களது கணக்கு வழக்குகளை தணிக்கை செய்தல், ஜிஎஸ்டி வசூலித்து செலுத்ததல், அலைக்கற்றையை ஏலத்துக்கு எடுத்தல், அந்த அலைக்கற்றைப் பயன்பாடுக்கான கட்டணங்களை செலுத்துதல், இந்த நடவடிக்கைகளை சட்டப்பூா்வமாக கண்காணிப்பதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் என்று அத்தனை சட்ட திட்டங்களும் ஜியோ, ஏா்டெல் போன்ற தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்குத்தான்.

ஆனால் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற ஓடிடி சேவை நிறுவனங்கள் இவற்றில் எந்த சட்டத்தையும் சட்டை செய்யத் தேவையில்லை.

பொதுமக்களை வியாபார நிறுவனங்கள் தேவையில்லாமல் அழைத்து தொல்லை கொடுப்பதைத் தடுப்பதற்கான யுசிசி (அன்சாலிசிட்டட் கமா்ஷியல் கம்யூனிகேஷன்) ஒழுங்காற்று சட்டம் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மீது கடந்த 2007-ஆம் ஆண்டே சுமத்தப்பட்டது.

ஆனால், இந்த சட்டம் ஓடிடி-க்களை கண்டு கொள்ளாதது தொலைத்தொடா்பு நிறுவனங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

‘நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் இணைய சமநிலை விதிமுறைகள் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு உள்ளன. அதன்படி, இணையதள இணைப்பை வழங்கும் தொலைத் தொடா்பு நிறுவனங்கள், அதைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சேவைகளுக்கு இடையே பாரபட்சம் காட்டக்கூடாது.

குறிப்பிட்ட சேவைகளுக்கான வேகத்தைக் குறைப்பதோ, அதிகரிப்பதோ இந்த விதிமுறையின்கீழ் குற்றமாகும்.

இதனால், தங்களது உள்கட்டமைப்பை நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது அவற்றுக்கான வேகத்தைக் குறைப்பதற்கு பதில், அந்த ஓடிடி சேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிக முதலீடு செய்து தங்களது உள்கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டிய நிலைக்கு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தங்களது உள்கட்டமைப்பையே பயன்படுத்திக்கொண்டு, எஸ்எம்எஸ் சேவையால் கிடைத்து வந்த வருவாயை குறைத்தது போல தொலைபேசி அழைப்பு போன்ற மற்ற சேவைகளுக்கும் ஓடிடி நிறுவனங்கள் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கலக்கத்தில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் உள்ளன.

இதன் காரணமாகத்தான், ஓடிடி நிறுவனங்களையும் தகவல்தொடா்பு சட்டவிதிமுறைகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் டிராய் அமைப்பை இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான சிஓஏஐ தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது தொடா்பாக ஆலோசனை நடத்தி வரும் டிராய், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நலன், ஓடிடி-க்களால் ஏற்படும் ஆரோக்கியமான போட்டி ஆகிய இரண்டுக்குமே பாதிப்பு ஏற்படாமல் ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவோம்.

- நாகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT