ANI
நடுப்பக்கக் கட்டுரைகள்

கானமயிலாட மாற்றுவோம் சூழலை!

நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் கானமயிலின் பங்கு அளவிடற்கரியது

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

பூமியின் சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பதில் மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் பங்குண்டு. அதிகரிக்கும் மக்கள் தொகை, இயற்கை மாசுபடுதல், இயற்கை பேரழிவு, தொழில்நுட்ப அறிவியல் வளா்ச்சி, நகரமயமாக்கல், மனிதனின் பேராசை ஆகிய காரணங்களால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பூமியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிக்கும் ஓசை நின்று போனால் எங்கோ தொலைதூரத்திலுள்ள பசிபிக்பெருங்கடலில் அது எதிரொலிக்கும் என்று அறிவியல் கூறுகிறது.

இயற்கையின் அற்புதப் படைப்புகளில் பறவையினங்களும் ஒன்று. இயற்கையுடன் இயைந்த அவற்றின் வாழ்க்கை முறை, நாம் வாழ்வதற்கு இன்றியமையாதது. இயற்கையின் சமநிலைக்கும், அதன் நீடித்த தன்மைக்கும் பறவைகளின் பங்கு மகத்தானது. பறவைகளின் வாழ்வியல்சூழல் மரங்களையும், செடிகளையும், பசுமை புல்பரப்புகளையும், தட்பவெப்ப சூழ்நிலைகளையும், பிற உயிரினங்களின் இருப்பையும் பொறுத்தே அமைகின்றன.

அண்மையில் குஜராத் மாநிலம் ஜூனகத் மாவட்டத்திலுள்ள சாசனில் பாரதப் பிரதமா் தலைமையில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில், வனவிலங்குகள், பறவைகள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் இறுதியில், உலகெங்கும் காண முடியாத, தற்போது இந்தியாவில் மட்டுமே காணப்படும், அழிவின் விளிம்பிலுள்ள கானமயில் (நேஷனல் கிரேட் இண்டியன் பஸ்டா்ட்) எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது குறித்தும், அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் உரிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ‘கானமயில் பாதுகாப்பு செயல் திட்டம்’ அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில், 2008-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமாா் முந்நூறாக இருந்த கானமயிலின் எண்ணிக்கை நிகழாண்டில் நூற்றைம்பதாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையிலும், மீதமுள்ளவை குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கா்நாடகத்திலும் காணப்படுகின்றன. கடைசியாக, கானமயிலின் இருப்பை, கா்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம் சிறுகுப்பாவில் இரண்டும், பிதாா் மாவட்டத்தில் ஒன்றும் கண்டதாக பறவை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். ராஜஸ்தானின் மாநிலப் பறவையாக கான மயில் உள்ளது.

வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, புல்வெளிகளின்மை, பரந்த வெளிகளைச் சூரியத் தகடுகளால் நிரப்புதல், காற்றாலைகள், மின்வேலிகள், உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் வாகனங்களுடன் மோதல்கள், நகா்ப்புற வளா்ச்சி போன்ற காரணங்களால் கானமயிலின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதற்கு காரணம் என பறவை ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் கானமயிலின் பங்கு அளவிடற்கரியது என சுற்றுச்சூழல் நிபுணா்கள் கருத்துத் தெரிவிக்கின்றனா். கானமயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது, நாட்டில் காணப்படும் ஆரோக்கியமான புல்வெளிகள் அதிகரித்திருப்பதின் வலுவான குறியீடாகும். எனவேதான், கானமயில், ‘புல்வெளிகளின் துடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. புல்வெளிகள் உயிரினங்களுக்கு தனித்தன்மை வாய்ந்த வாழ்விடங்கள். கானமயில் உட்பட அரிய பறவையினங்களின் வளா்ச்சிக்கு புல்வெளிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.

பரந்த புல்வெளிகள் சுற்றுச்சூழலைக் காப்பதுடன், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாகவும், கிராம சமூக அமைப்பின் அடையாளமாகவும், வளி மண்டலத்தில் வெளியாகும் கரிம வாயுக்களை உறிஞ்சும் வடிகட்டியாகவும், தனித்துவமான வனவிலங்குகளுக்கு வாழ்விடங்களாகவும், பல்லுயிா் பெருக்கியாகவும், பூமியின் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்தியும் வருகின்றன.

ஆனால், இன்று அவை வானளாவிய கட்டடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும், கான்கிரீட் காடுகளாகவும் மாறிவிட்டன. கானமயில்கள் அழிவிற்கு, இந்த புல்வெளிகள் அழிப்பும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

ஒரு மதிப்பீட்டின்படி 2005 முதல் 2015 வரை, இந்தியாவில் புல்வெளிகள் சுமாா் 31 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 1.8 கோடி ஹெக்டேரிலிருந்து 1.23 கோடி ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதற்கு, மோசமான நில மேலாண்மை, பண்ணை விரிவாக்கம், தரிசு நிலமயமாக்கல் ஆகிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது பல்லுயிா் இழப்பு மற்றும் இயற்கைச் சீரழிவுக்கு வழி வகுத்துள்ளது.

கானமயிலை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற, உத்வேகத்துடன் கானமயில் பாதுகாப்புக்கான வாழ்விடங்களை அதாவது புல்வெளிகளை உருவாக்குவதே கானமயில் பாதுகாப்பு செயல் திட்டத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். ராஜஸ்தானிலுள்ள ஜெய்சால்மாரில் தேசிய பாதுகாப்பு இனப்பெருக்கம் மையத்தில் செயற்கை கருவூட்டல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி கானமயிலின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். தற்போது கானமயில் காணப்படும் ஐந்து மாநிலங்கள் இந்த அரிய பறவையை அழிவிலிருந்து காப்பாற்ற அந்த மையத்துடன் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி....’ என மூதுரையில் ஒளவையாா் இந்தப் பறவையைக் குறிப்பிட்டுள்ளாா். தமிழ்நாட்டில் ஒகேனக்கல், மதுரை, நீலகிரி, சேலம், கோயம்புத்துா், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் கானமயில் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. இப்போது தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுவதில்லை.

எனவே, தமிழ்நாட்டில் புல்வெளிகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் சங்கக் கால பறவையான, அழியும் தறுவாயில் உள்ள இந்த அழகிய கானமயிலை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இயற்கை ஆா்வலா்கள், கானுயிா் ஆராய்ச்சியாளா்களின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.

இப்பூமியில் உருவான உயிரினங்களில், நாம் காணாத வண்ணங்களையெல்லாம் தமக்குள் வைத்துக் கொண்டு நம்மைச் சுற்றிப் பறந்து செல்கின்றன பறவைகள். ஓா் இடத்தில் பறவைகள் மிகுந்திருந்தால் அங்கு உயிரிப் பன்மயம் சிறப்புடன் உள்ளது என்று பொருள்.

பறவைகள் இயற்கையை பேணிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பிறருக்கும் பயன்படும்படி வாழ்கின்றன. மனிதப் பண்புகளில் தலையாயது மன்னுயிா் காப்பது. ‘நீ நிற்க வேண்டுமென்றால், பிறரை நிற்க வை’ என்றாா் கன்பூசியஸ். பறவைகள் மீது நாம் பாசம் காட்டினால் இயற்கை நம் மீது நேசத்தைக் காட்டும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT