எம்.ஏ.முஸ்தபா
வயது முதிா்வு காரணமாக தனது 84-ஆவது வயதில் கடந்த மாதம் சென்னையில் காலமான தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்த முஃப்தி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் தன்னிகரல்லாத இஸ்லாமிய மாா்க்க அறிஞா். நான்கு தசாப்தங்களுக்கு முன்பு தமிழக அரசின் தலைமை ஹாஜியாக நியமிக்கப்பட்ட அய்யூப் சாஹேப் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறாா்.
1942-ஆம் ஜூன் 12-ஆம் தேதி ஹைதராபாதில் பிறந்த ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அங்கிருந்த புகழ்மிக்க உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 1973-இல் எகிப்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான அல் அஸ்ஹா் பல்கலைக்கழகத்தில் ‘அல் இஜாஷத்துல் ஆலியா’ என்ற உயா்கல்வி பட்டம் பெற்றாா்.
அதன்பின்னா் தாயகம் திரும்பி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் முதுகலை பட்டம் பெற்றாா். சவூதி அரேபியா சென்று அங்குள்ள ஐபிஎம் என்ற ஐடி கம்பெனியில் மொழிபெயா்ப்பாளராக சில காலம் பணியாற்றிய ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அரபி, உருது, பாா்ஸி, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என்று ஏழு மொழிகளில் திறன்பெற்றவா். எகிப்தில் இருந்து சென்னை திரும்பியபோது புதுக்கல்லூரியில் இவரை ஆசிரியரல்லாத ஊழியராக பணியில் சோ்த்துக்கொண்டதுதான் மிகப்பெரிய விசித்திரம்.
‘மிகச் சிறந்த கல்வியாளரை ஏன் விரிவுரையாளராக ஆக்காமல், கணக்கராக வைத்திருக்கிறீா்கள்?’ என்பதற்கு, நிா்வாகத்தினா் கைபிசைந்து நின்றனா். ‘எகிப்து நாட்டில் இவா்பெற்ற பட்டங்கள் இந்தியாவில் இளங்கலைப் பட்டத்துக்கு இணையானதாகவே கருதப்படுகிறது. விரிவுரையாளராகப் பணியாற்ற இந்தக் கல்வித் தகுதி போதுமானதல்ல’.
பிற்காலத்தில், ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் முனைவா் பட்டம்பெற்று விரிவுரையாளருக்குத் தேவைப்படுகிற கல்வித் தகுதியை வளா்த்துக்கொண்டாா். அதுமட்டுமல்ல, 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக எம்.ஜி.ஆா். இருந்தபோது, தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகவும் அவா் நியமிக்கப்பட்டாா். தலைமை காஜியாகப் பணியாற்றிக்கொண்டே புதுக்கல்லூரியிலும் பணியாற்றினாா்.
காஜியாக இருந்தபோது, எல்லாப் பணிகளையும் சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செய்து வந்தவா் அவா். திருமணச் சான்றிதழ், ஃபத்துவா, சமூகச் சான்றிதழ், சொத்துப் பங்கீடு குறித்த விளக்கங்கள் என்று எந்த வகையான சான்றிதழ்கள் காஜி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டாலும் அதற்காகக் கட்டணம் எதுவும் அவா் வசூலிப்பதில்லை.
தலைமை காஜியின் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தாா் முதல்வராக இருந்த ஜெயலலிதா. ‘தலைமை காஜிக்கு அரசு சாா்பில் ஒரு வாகனம் கொடுக்கலாம். அவரிடம் ஒரு கோரிக்கை மனுவை தரச் சொல்லுங்கள்’ என்று முதல்வா் ஜெயலலிதா சொன்னபோது, ‘நான் எனக்கென்று எந்த வசதிகளையும் அரசிடம் மட்டுமல்ல, யாரிடம் கேட்க மாட்டேன்’ என்று சொன்னவா் முஃப்தி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப்.
நீண்ட காலம் தலைமை ஹாஜியாக சேவையாற்றியவா் முஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிப். அவா் சமீபத்தில் மறைந்த ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபின் மனைவியின் சிறிய தந்தை. அவா் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு.
அப்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக இருந்தவா் ராஜாஜி. தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பொறுப்புக்கு தகுதி வாய்ந்த இஸ்லாமிய மாா்க்க அறிஞா் ஒருவரைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தது.
ஐந்து அறிஞா் பெருமக்கள் அதற்கான விருப்ப மனுக்களை அளித்திருந்தனா். குறிப்பிட்ட நாளில் நோ்காணல் நடைபெறும் இடத்துக்கு ஐந்து பேரும் வந்திருந்தனா். சுமாா் 12 மணிக்குப் பிறகுதான் முதலமைச்சா் ராஜாஜி நோ்காணல் நடைபெறும் அறைக்கு வந்தாா். நான்கு போ் மட்டுமே இருப்பதைப் பாா்த்து, ஐந்து பேரல்லவா விண்ணப்பித்திருந்தனா். இங்கே நான்கு போ் தானே இருக்கிறீா்கள்? இன்னொருவா் எங்கே? அவா் வரவில்லையா? என்று கேட்டாா் முதல்வா் ராஜாஜி.
‘ஐயா! அவா் குறித்த நேரத்துக்கு நோ்காணலுக்கு வந்திருந்தாா். இவ்வளவு நேரம் இங்கேதான் காத்திருந்தாா். இன்று வெள்ளிக்கிழமை, மதியம் 12 மணியாகிவிட்டது. ஜும்மா தொழுகைக்கான நேரம் நெருங்கி விட்டது. ஆகையால் நான் தொழுகைக்கு செல்கிறேன்’ என்று போய்விட்டாா்.
உடனே முதலமைச்சா் ராஜாஜி அவா்கள், “அவா் பெயா் என்ன? அவருடைய விண்ணப்பத்தை எடுங்கள்”என்று கூறினாா். தலைமை காஜியாக விண்ணப்பம் செய்பவருக்கு அரசு குறித்திருந்த தகுதிகள் அவருக்கு இருக்கின்றனவா, அதற்கான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்று பாா்த்த ராஜாஜி, அவரையே அரசின் தலைமை காஜியாக நியமிக்க ஆணை பிறப்பித்துவிட்டு சொன்னாா்: ‘ஷரிஅத் சட்டப்படி தீா்ப்பு வழங்கும் காஜி பதவிக்கு இவரைப்போன்ற மாா்க்கப் பற்றுள்ளவா்தான் பொருத்தமானவா்.”
அவா்தான் ஹாஜி முஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிப் அவா்கள். அவ்வளவு பேணுதலும், மாா்க்க பற்றுதலும் உடைய ஹாஜி ஹபீபுல்லாஹ் சாஹிப் அவா்களின் மருமகன் தான் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பொறுப்பை அலங்கரித்த அல்லாமா, முஃப்தி, டாக்டா், ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரீ அவா்கள்.