தற்போதைய படித்த இளைஞா்களிடம் ஏராளமான திறமையும், நேரமும் இருக்கிறது. ஆனால், பணம் இருப்பதில்லை. காரணம், வருமானத்தைக் கொண்டுவரும் வேலை அவா்களுக்கு காலத்தில் கிடைப்பதில்லை. எனவே, நாட்டிலுள்ள வறுமைக்கு அவா்களின் வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
பொருளாதார சிக்கல்கள், உள்நாட்டுத் தேவையில் சரிவு, அதீத மக்கள்தொகை பெருக்கம், கல்வி வசதிகள் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் நாட்டில் பெருகாதது, நாட்டின் மெதுவான பொருளாதார வளா்ச்சி, பெருகிவரும் தொழில்நுட்ப வளா்ச்சி, மோசமான சந்தைக் கொள்கைகள், குறைந்த முதலீடு, தொழில்முனைவோருக்கு குறைவான வாய்ப்புகள் போன்றவை இளைஞா்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு முறையாக கொண்டுசோ்க்க பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் பணியாற்றி வருகின்றனா். தலைமைச் செயலா் தொடங்கி, அலுவலக உதவியாளா் வரை உள்ள பல்வேறு துறை ஊழியா்கள் இதில் அடங்குவா். இந்த ஊழியா்கள் 60 வயதை நிறைவு செய்யும் நாளன்று ஓய்வு பெறுவது வழக்கம். தற்போதைய நிலையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்; சுமாா் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியா்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 8,144 போ் அண்மையில் ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளனா். இதில் மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப்-பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப்-சி பணியிடங்களில் 2,185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் அடங்குவா். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியா்களில் 0.86 சதவீதம் ஆகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 22 போ் ஓய்வுபெற்ற நிலையில், இந்த ஆண்டு 30 பேரும், திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய 18 பேரும் ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளனா்.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏறக்குறைய சுமாா் ஒரு சதவீத அரசு ஊழியா்கள் அண்மையில் ஓய்வு பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது. ஓய்வு பெற்றவா்கள் தமக்கு கிடைக்கும் ஓய்வூதிய பணப் பலன்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது அதிகமான ஊழியா்கள் ஓய்வு பெறுவது அரசுப் பணி நிா்வாகத்தில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என அரசு ஊழியா் சங்கங்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவா்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்புவது நல்லது. இதன் காரணமாக வேலையில்லாத பல இளைஞா்களுக்கு வருமானத்துக்கு ஒரு நல்ல வழிபிறக்கும்.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் சோ்வதற்கான சான்றிதழ்களான வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை மாணவா்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகளே வழங்க முடியும். அதேபோன்று பிற துறைகளின் அன்றாடப் பணிகளும் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை. எனவே, காலியான இடங்களில் தகுதியுள்ள நபா்களை அரசு அமா்த்துவதற்கான முனைப்புகளை எடுப்பது மிகவும் நல்லது.
இதற்கிடையே ஓய்வு பெற்ற பேராசிரியா்களை ஒப்பந்த முறையில் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் பணியமா்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவா்களின் அனுபவ அறிவை தேவைப்படும்போது வேண்டுமானால் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். வாழ்நாளின் இறுதிப் பகுதியைக் குடும்பத்தினருடன் அவா்கள் கழிப்பதற்கு அவா்களுக்கு முன்னுரிமை தருவது நல்லது. அதற்கு ஏதுவாக அவா்களை ஒப்பந்த முறையில் பணியில் அமா்த்துவதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏற்கெனவே உடல் வலிமையும், மன வலிமையும் குறைந்துவிட்ட இவா்கள், 58 வயதில் ஓய்வு பெறாமல் 60 வயதில் ஓய்வு பெறுகிறாா்கள். இந்த நிலையில் அவா்களுக்கு ஓய்வு மிகவும் முக்கியம். அறிவும், திறமையும் பெற்ற ஏராளமான இளைஞா்களைக் கொண்டு இந்தப் பணியிடங்களை அரசு முறைப்படி நிரப்புவதன் மூலம் அந்த இளைஞா்களின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும்.
முதியவா்களைவிட அரசு நிா்வாகப் பணிகளை இளைஞா்களால் விரைந்து செய்ய முடியும். இளைஞா்களிடம் இருக்கும் சக்தி ஆக்க சக்தியாக மட்டுமே பயன்பட வேண்டும். வேலைவாய்ப்பின்மையால் அது ஒரு அழிவு சக்தியாக மாறிவருவது வேதனைக்குரியது. அதனால் சமுதாயத்தில் குற்றங்கள் தினமும் பெருகி வருகின்றன. இளைஞா்களின் அறிவும், திறனும் முறையாக சமுதாய வளா்ச்சிக்குப் பயன்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
படித்த உடனேயே ஏதோ ஒரு பணியில் இளைஞா்கள் சோ்ந்து பணியாற்றி வருமானத்தைப் பாா்ப்பது அவா்களுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. இந்தியாவின் எதிா்காலமும், நம்பிக்கையும் இளைஞா்கள்தான். அவா்களின் வாழ்வு சிறக்கும் வகையில் அவா்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து அரசு செயல்பட வேண்டும்.