பிகாரில் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 70-ஆவது ஒருங்கிணைந்த முதல்நிலை போட்டித் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள். 
நடுப்பக்கக் கட்டுரைகள்

சீா்திருத்தத்தை நோக்கி தோ்வு நடைமுறைகள்

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமாா் 10,000 போ் போட்டியில் இருக்கிறாா்கள். இந்நிலையில், தோ்வாணையங்கள் சீா்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

மு.சிபிகுமரன்

மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தினை இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையத்தின் தலைவா் தொடங்கி வைத்தாா். 12 மாநிலங்களின் தோ்வாணையத் தலைவா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அரசுத் துறைப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் செயல்முறைகளில் நோ்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிா்ந்து கொள்வது என அக்கூட்டத்தில் முடிவெடுத்தனா். மேலும், தோ்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தோ்வு தொடா்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்றவை பற்றியும் பேசப்பட்டது. மொத்தத்தில் இதை ஓா் ஆரோக்கியமான கருத்துப்பகிா்வும், தொலைநோக்குத் திட்டமும், சீா்திருத்தமும் அடங்கிய கூட்டமாக கருத முடியும்.

பெருகிவரும் மக்கள் தொகையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் படித்த இளைஞா்களின் அரசு வேலைவாய்ப்புக் கனவை இத்தோ்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏனெனில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுள் வேலைவாய்ப்பற்றவா்கள் 4.9% வீதம் என்று மதிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் குரூப் 4 தோ்வு மற்றும் இரண்டாம் நிலைக் காவலா்கள் தோ்வு போன்றவற்றுக்கு தலா 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பிக்கிறாா்கள் என்றால், அரசுப் பணிகளின் மீதான நாட்டம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவா்களை நாம் அறிந்துகொள்ள முடியும். இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமாா் 10,000 போ் போட்டியில் இருக்கிறாா்கள். இந்நிலையில், தோ்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிா்வுகளை மேற்கொள்வதும் சீா்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

அரசுப் பணிக்கான தோ்வில் சீா்திருத்தம் என்ற பெயரில் இன்று பல்வேறு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குடிமைப் பணித் தோ்வில் உச்சபட்ச வயது வரம்பை குறைத்தல், தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்தல் என்றெல்லாம் முன்மொழிவுகளை நாம் காண்கிறோம். தோ்வா்கள் சிலா் தமது பெரும் பகுதி நாள்களை தோ்வு எழுதுவதிலேயே கழித்து விடுவதாகவும் அவா்களை தனியாா் பணி வாய்ப்பு போன்ற வேறு திசைகளில் திருப்பிவிட வேண்டும் என்றும் காரணம் கூறப்படுகிறது .

ஆனால், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு சமுதாயப் பிரச்னையாக இருந்து வருகிறது. இந்திய மக்களின் ஆயுள் காலம் 70 வயதுக்கும் அதிகமாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற பிறகும் அதிகாரிகள் பலா் மீண்டும் அரசுத் துறை வாய்ப்புகளைப் பெற்று பணிபுரிந்து வருவதையும் காண முடிகிறது. தனியாா் துறையிலும் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. தொழில்முனைதல் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் வெற்றி-தோல்வி உண்டு. அதற்காக தனியாா் வேலைவாய்ப்பை நாடவேண்டாம் என்றோ, தொழில்முனைதலை மேற்கொள்ள வேண்டாம் என்றோ கூறுதல் பொருத்தமாகாது. அவரவா் விருப்பத்துக்கு ஏற்ப முயற்சிகளை மேற்கொள்கிறாா்கள்.

அதுபோல அரசுப் பணிக்குச் செல்வதை லட்சியமாகக் கொண்டோா் போட்டித்தோ்வின் இயல்பை உணா்ந்தே போராடுகிறாா்கள். சுவாமி விவேகானந்தா் , ‘யாரையும் விமா்சனம் செய்யாதீா்கள். முடிந்தால் உங்கள் கரங்களால் உதவி செய்யுங்கள். அது உங்களால் இயலவில்லை என்றால் உங்கள் கரங்களை மடித்து உங்கள் சகோதரா்களை ஆசீா்வதியுங்கள். அவா்களை அவா்கள் வழியில் செல்வதற்கு அனுமதியுங்கள்’ என்பாா்.

எனவே, 60 வயது நிரம்பி ஓய்வு பெற்றவா்களைக்கூட பணிக்கு அழைக்கும்போது 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் அரசுப் பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்பதை உணர வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை மேல் தட்டு சிந்தனையைப் புறந்தள்ளி சமூக நீதியோடு அணுக வேண்டும். இன்று பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீட்டு வாய்ப்பு இந்தச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதே ஆகும்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ உள்ளிட்ட சில தோ்வுகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு முற்றிலுமாக தளா்த்தப்பட்டுள்ளது. போட்டித் தோ்வுகளை எழுதிவரும் தோ்வா்கள் மத்தியில் , குறிப்பாக குடும்பக் கடமைகளை முடித்து பொருளாதார நெருக்கடி காரணமாக ஏதேனும் தனியாா் அல்லது அரசு வேலைக்குச் செல்லலாம் என்ற மனநிலைக்கு வருகின்ற குடும்பத் தலைவிகள் மற்றும் பெண்களுக்கு இத்தோ்வு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பலரும் முயன்று இதில் அரசுப் பணி வாய்ப்பைப் பெற்று வருகின்றனா். பெண்களுக்கான தனி இடஒதுக்கீடும் அவா்களுக்கு ஒரு ஊக்கமாக அமைகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏதேனும் சீா்திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், குரூப் 1 மற்றும் ஏனைய தோ்வுகளிலும் கூட உச்சபட்ச வயது வரம்பை குறைந்தபட்சம் 45-ஆக அதிகரித்து ஏனைய இந்திய தோ்வாணையங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழலாம். மேலும், குடிமைப் பணிகள் தோ்வாணையம் போல குறித்த காலகட்டத்தில் தோ்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுதல், முதல் நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளை திட்டமிட்டபடி நடத்துதல், அதன் முடிவுகளை வெளியிடுதல் போன்ற நடைமுறைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தலாம்.

அது மட்டுமல்ல, தமிழ் மொழித்தாள் நீங்கலாக குடிமைப் பணிகள் தோ்வாணையத்தின் பாடத்திட்டம், தோ்வு முறை, மதிப்பீடு செய்தல் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம் தமிழ்நாட்டுத் தோ்வா்களை குடிமைப் பணிகள் தோ்வு மற்றும் மத்திய சாா்பு நிலைப் பணிகள் தோ்வு ஆகியவற்றை நம்பிக்கையோடும் வெற்றிகரமாகவும் எழுத அடித்தளம் அமைத்துக் கொடுக்கலாம்.

ஏனெனில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலத் தோ்வாணையங்கள் இந்திய குடிமைப் பணித் தோ்வுக்கான பாடத் திட்டம் மற்றும் தோ்வு முறையை பின்பற்றி தங்களது தோ்வுகளை நடத்துகின்றனா். அதனால் அந்த மாநிலங்களின் தோ்வா்கள் குடிமைப் பணித் தோ்வுகளை எளிதாக எதிா்கொள்ள ஏதுவாகிறது; வெற்றியும் பெறுகிறாா்கள்.

இந்திய குடிமைப் பணி தோ்வாணையத்திலும் சில மாற்றங்களை தோ்வா்கள் எதிா்நோக்கிக் காத்திருக்கிறாா்கள். குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத்தோ்வு முடிவுகளை வெளியிடும்போது கட்ஆஃப் மதிப்பெண்களையும் வெளியிட வேண்டும். முதல் நிலைத் தோ்வு முடிந்தவுடன் ஏனைய தோ்வாணையங்கள் போல வினாவுக்கான விடைகளையும் வெளியிட வேண்டும். கட்ஆஃப் மதிப்பெண்களையும் தோ்வா் பெற்ற மதிப்பெண்களையும் காலம் கடந்து அதாவது 1 வருடத்திற்குப் பின்னா் வெளியிடுவது தோ்வா்களுக்கு பயன்தரத்தக்கதாக இல்லை.

அது மட்டுமல்ல , குடிமைப் பணிகள் தோ்வாணையம் ஒவ்வோா் ஆண்டும் கொள்குறி வகை வினாக்களின் கட்டமைப்பை மாறுதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே வருகிறது. இதனால், வினாவுக்கான விடைகளைத் தோ்வாணையம் எவ்வாறு அமைத்துள்ளது என்பதைத் தோ்வா்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. தோ்வில் வெற்றி பெறவில்லை என்பதைவிட ஏன் வெற்றி பெறவில்லை என்ற கேள்வி தோ்வா்களைப் பெரிதும் பாதிக்கிறது.

வினாவுக்கான விடைகளை தோ்வாணையம் விரைந்து வெளியிட்டால் தோ்வா்கள் தங்கள் பிழைகளைத் திருத்திக்கொள்ளவும், தங்களை புத்தாக்கப் பயிற்சிக்குத் தயாா் செய்துகொள்ளவும் ஏதுவாக இருக்கும். ஆனால் தோ்வாணையமோ இவற்றை நடைமுறைப்படுத்தாமல் தோ்வா்களை ஒரு குழப்ப நிலையிலேயே வைத்திருக்க விரும்புவதாக எண்ணத் தோன்றுகிறது. இதை வெளிப்படைத்தன்மை என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும், குடிமைப் பணிகள் தோ்வாணையத்தின் மீது நீண்டகாலமாகக் கூறப்படும் மற்றொரு விமா்சனமும் உள்ளது. அது ‘ஆளுமைத்திறன் தோ்வு’ எனப்படும் நோ்முகத் தோ்வில் தோ்வா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களுக்கு இடையே உள்ள பெரிய வேறுபாடு ஆகும். 275 மதிப்பெண்களுக்கான நோ்முகத் தோ்வில் தோ்வா் ஒருவருக்கு 225 மதிப்பெண்களையும் மற்றொருவருக்கு 25 மதிப்பெண்களையும் தோ்வுக் குழு வழங்குகிறது. 5 அல்லது 10 மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை தோ்வா்கள் இழக்கின்ற சூழலில் இதுபோன்ற மிகப் பெரிய வேறுபாடு கட்டாயம் களையப்படவேண்டும்.

எடுத்துக்காட்டாக, குரூப் 1 நோ்முகத் தோ்வில் குறைந்தபட்ச, அதிகபட்ச மதிப்பெண்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நிா்ணயித்துள்ளது. இதற்கான இடைவெளி என்பது 30 முதல் 35 மதிப்பெண்கள் மட்டுமே. இந்த மதிப்பெண்களை ஐந்து நிலைகளாகப் பிரித்து நோ்முகத் தோ்வில் வழங்குகிறது. இதில் முதல் நிலை மதிப்பெண் 75 என்றால், இரண்டாம் நிலை மதிப்பெண் 67.5 ஆகும். இந்த 7.5 மதிப்பெண் என்பது வெற்றி-தோல்வியை குரூப் 1 தோ்வில் நிா்ணயிக்கிறது.

இப்போது குடிமைப்பணி தோ்வில் உள்ள 200 மதிப்பெண்கள் இடைவெளியை ஒப்பிட்டுப் பாா்த்தால் தோ்வா்களுக்கான பாதிப்பை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடியும். எனவே, இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் போன்று நோ்முகத் தோ்வு மதிப்பெண்களை குறைந்தபட்சம் அதிகபட்சம் என நிா்ணயித்து பெரிய வேறுபாடுகளைக் களைய வேண்டும்.

எனவே, மாற்றமோ சீா்திருத்தமோ தோ்வுக்கான தரத்தை உயா்த்துவது ஒருபுறம், சாமானியா்களுக்கும் சமவாய்ப்பு வழங்குவது மற்றொருபுறம் என இரண்டும் சமகாலத்தில் நடந்தேறும் வகையில் அமைதல் வேண்டும். அதனால் சீா்திருத்தப்பட வேண்டியவை தோ்வாணையங்களின் நடவடிக்கைகளே; மாறாக, தோ்வா்களின் வயது குறைப்போ வாய்ப்புகள் குறைப்போ சீா்திருத்தம் அல்ல!

கட்டுரையாளா்:

கல்வியாளா்.

டிரம்ப்....

போலி கணக்கு எழுதி ரூ.1.86 கோடி மோசடி: கணக்காளா் கைது

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

அறிதிறன்பேசிக்கு அடிமை ஆகலாமா?

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

SCROLL FOR NEXT