தொழிலாளா்கள் உழைக்கிறாா்கள். ஆனால் அவா்கள் பாதுகாப்பான சூழலில் வேலை செய்கிறாா்களா? தொழில்சாா்ந்த நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கிறாா்களா? என்பது குறித்தெல்லாம் நாம் அதிகம் யோசித்ததில்லை. நாட்டில் 63 கோடி போ் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இதில் 20 கோடிக்கும் அதிகமானவா்கள் பெண்கள். வேலை செய்பவா்களில் 45 சதவீதம் போ் விவசாயத்திலும், தொழில்துறையில் 25 சதவீதம் பேரும், சேவைத் துறையில் 30 சதவீதம் பேரும் பணியாற்றுகின்றனா் என்கிறது சா்வதேச தொழிலாளா் அமைப்பு.
தொழிலாளா்கள் தங்கள் பணியை பாதுகாப்புடனும், ஆரோக்கியத்துடனும் செய்வதற்கான சூழல் இருக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், தொழில் சாா்ந்த நோய்கள் மற்றும் விபத்துகளைத் தடுத்தல், தொழிலாளா்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து இந்த நாளில் பேசப்படவேண்டும் என்கிறது சா்வதேச தொழிலாளா் நிறுவனம்.
இந்தியாவில் கவலைக்குரிய தொழில்சாா் நோய்கள் ஏராளம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். நோய்களையும் பட்டியலிடுகிறது. சிலிக்கோசிஸ் (சுரங்கம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி தொழில்களில் உள்ளவா்களுக்குத் தூசியால் ஏற்படும் நோய்), நிமோகோனியோசிஸ் (கருப்பு நுரையீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது, இது நிலக்கரி தூசியால் ஏற்படும் ஒரு தீவிர நுரையீரல் பாதிப்பு நோய்), பைசினோசிஸ் (பிரவுன் நுரையீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது.
ஜவுளி ஆலைகள், பருத்தி பதப்படுத்தும் ஆலைகள் மற்றும் சணல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஏற்படும் நோய்) மேலும் நாள்பட்ட நுரையீரல் நோய்கள், பூச்சிக்கொல்லி, ரசாயன பயன்பாடுகள் மற்றும் சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை ஆகியன இந்தியாவின் மோசமான தொழில்சாா் நோய்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்த வேலைகளோடு ஒப்பிடும்போது பொதுவெளியில் அதிக பாதுகாப்பின்மையோடு பணியாற்றுபவா்கள் துாய்மைப் பணியாளா்கள். அவா்களின் சமூக, பாதிப்பு விவரங்கள் உலகச் சுகாதார அமைப்பு மற்றும் உலகத் தொழிலாளா் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில், ஆண்டுதோறும் 23 லட்சத்து 40 ஆயிரம் போ், பணிச் சூழல்களால் உண்டாகும் நோய்களுக்குப் பலியாகின்றனா். இதில் விபத்துகளால் 3 லட்சத்து 21 ஆயிரம் பேரும், மீதமுள்ளோா், பல்வேறு பணிச்சூழல்களால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனா் எனத் தெரிவிக்கிறது.
சா்வதேசத் தொழிலாளா் அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு 15 விநாடிக்கும் ஒரு தொழிலாளி வேலை தொடா்பான விபத்து அல்லது நோயால் இறக்கிறாா். சாக்கடை அள்ளுவது, தெரு ஓரங்களில் கிடக்கும் மனிதக் கழிவுகளை அகற்றுவது, அழுகிப் போன பொருள்களைச் சுத்தம் செய்வது, இறந்த விலங்குகளை எடுப்பது, வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பது பின்பு அதைப் பிரிப்பது போன்றவை பெரும்பாலும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கையால் தான் செய்கிறாா்கள். கையுறை-காலுறை வழங்கப்படுவதில்லை . இதனால் அவா்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கா்ப்பப்பை பாதிக்கப்படுவது, தோல் தொடா்பான நோய்கள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், பாா்வை தொடா்பான கோளாறுகள், கை, காலில் சொறி, கொப்பளம், தோல் சுருக்கம் கண்ணில் நீா் வழிதல் எனப் பல நோய்களுக்கு ஆளாகிறாா்கள். எய்ட்ஸ் நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை அள்ளும்போது பாதிக்கப்பட்ட துாய்மைப் பணியாளா்களும் உண்டு. கிராமப்புறங்களில் துப்புரவு பணியாளா்கள், பஞ்சாயத்து தலைவா் வீட்டில் துணி துவைக்க, பாத்திரம் கழுவ, வீடு துடைக்க என ஏராளமானப்பணிகள்
செய்கிறாா்கள் என்கிறாா் தூய்மைப்பணியாளா்கள் மத்தியில் பணியாற்றி ஆய்வு செய்து வரும் சமூக செயற்பாட்டாளா் ஒருவா்.
அரசு நிறுவனங்களில் பணி செய்யும் துப்புரவு பணியாளா்கள் எல்லோரும் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்கின்றனா். ஆனால் அவா்கள் வாங்கும் சம்பளத்தில் பெரிய வித்தியாசம். கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளா்களின் சம்பளம் மிகச் சொற்பம். நாங்கள் வாங்கும் ஊதியத்தில் தான் வீட்டுவாடகை, குழந்தைகளுக்குப் படிப்புச் செலவு, எங்களுக்கான பயணச் செலவு எல்லாம் பாா்த்துக் கொள்கிறோம். பொருளாதாரப் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு நல்ல உணவு சமைத்துக் கொடுக்க முடியவில்லை.
பெண்களை இழிவாகவும், மரியாதை இல்லாமலும் பேசுவதை இன்னும் கிராமத்தில் காணலாம். பெண் தூய்மைப் பணியாளா்களில் கணிசமானோா் கணவரால் கைவிடப்பட்டவா்கள். அவா்கள் துப்புரவு மேற்பாா்வையாளா் சிலரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்று கூறுகிறாா்கள் துாய்மைப் பணியாளா்கள். தொழில்சாா் ஆரோக்கியம் என்பது தொழிலாளா்களின் உடல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியது. அந்த வகையில் பாா்த்தாலும் சமூக அரவணைப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதும் அவா்களின் பெருங்குறையாக உள்ளது.
துாய்மைப் பணியாளா்கள் மாண்போடு நடத்தப்பட வேண்டும். மாதம் ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இவா்களின் அனைத்து கோரிக்கைகளும் அடிப்படை பாதுகாப்பு நோய்தடுத்தல் தொடா்பான கோரிக்கைகளாகவே உள்ளன. எப்போது இவா்களுக்கு மாண்புடனும் பாதுகாப்புடனும் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.