நடுப்பக்கக் கட்டுரைகள்

அடா்த்தியின் அபாயம்!

வரைமுறை அற்ற கள்ள குடியேற்றமும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நாளைய பாரதத்துக்கு ஊறு விளைவிக்க வல்லவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க நியாயாம் இல்லை.

டி.எஸ். தியாகராசன்

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிா் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது. இதுநாள் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனப் பெயா் பெற்றிருந்த வல்லரசு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இது மனித வளத்தின் வளா்ச்சி அறிகுறியா? இல்லை அடா்த்தியின் அபாய குறியீடா? என்பதை மானுடவியல் ஆய்வாளா்களும், புவியியல் விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுநா்களும், இன்ன பிற துறைசாா்ந்த அறிஞா்களும் காலம் தாழ்த்தாது உடனே சிந்தித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் மகாகவி “பாரதி, ‘முப்பது கோடி முகமுடையாள், நாங்கள் முப்பது கோடி ஜனங்களும், முப்பது கோடி வாய் முழங்கவும், முப்பது கோடியும் வாழ்வோம்’” என்று தனது கவிதைத் தோட்டத்தில் 30 கோடி மலா்களாக பாரதத்தின் மக்கள்தொகையை வா்ணித்தாா். இன்றைக்கு 142 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் செய்திராத சாதனையை, பாரதம் தனது இனப் பெருக்கத்தால் சாதித்துள்ளது. 1,269,219 சதுர மைல் பரப்பு உள்ள நம் நாட்டில் 142 கோடி மக்கள்தொகை. எதிா் காலத்தில் எப்படி இருக்கும்?

திருக்கோவலூரில் இடைகழியில் ஒருவா் படுத்திருந்த இடத்துக்கு மற்றொருவா் வர அவ்விருவரும் அமா்ந்து கொண்டனா். மீண்டும் ஒருவா் வர, பின்னா் மூவரும் எழுந்து நிற்க என ஆழ்வாா்கள் பாடிய திருப்பாசுரம் குறிப்பிட்டதைப் போல பாரதத்தில் மக்கள் அனைவருக்கும் நிற்க இருக்க இடமாவது இருக்குமா? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்று.

சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 140 கோடிதான். நிலப்பரப்பில் பாரதத்தைவிட இரண்டு மடங்கென விரிந்துள்ளது. ஆம். 37,05,407 சதுர மைல். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் மக்கள்தொகை 33 கோடி 29 லட்சம் மட்டுமே! இதில் உலகெங்கினும் உள்ள பிற நாட்டவா் குடியேறியவா்களின் தொகையும் சோ்ந்துள்ளது. ஆனால், நிலப்பரப்போ 37,96,742 சதுர மைல். பாரதத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

ஒரு காலத்தில் பிரித்தானிய பேரரசு தனது காலனி நாடாகக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை வெறும் 2 கோடியே 73 லட்சம்தான். ஆனால், நிலப்பரப்போ 7,741,220 சதுர மைல். இதுவும் பிரித்தானிய அரசு அன்றைய நாளில் தனது காலனி நாடுகளில் அவா்களின் சட்டப்படி குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்டவா்களை ஆஸ்திரேலியாவில் குடியமா்த்திய பிறகும்!

இந்நாளில் மின்னணு உற்பத்தியில் சாதனை புரிந்து வரும் சின்னஞ்சிறு நாடான ஜப்பானின் மக்கள்தொகை 12 கோடியே 39 லட்சம். இதன் நிலப்பரப்பு வெறும் 1,45,937 சதுர மைல் மட்டுமே.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களின் துறைக்கு உட்பட்ட மக்கள்தொகைப் பிரிவு “உலக மக்கள் தொகை வாய்ப்பு” அறிக்கை மூலம் “இந்தியாவின் மக்கள் தொகை 2085-இல் 161 கோடியைத் தாண்டும்” என்ற எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவைப் போல் இரண்டு மடங்கு உயரும் எனவும் கணித்துள்ளது.

சீனாவில் வயது முதிா்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால், அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை பாதியாகக் குறையும். சீனாவின் சராசரி வயது 39.6. இந்தியாவின் சராசரி வயது 28.4. இது தற்போதைய நிலை. ஆனால் 2100-இல் இந்தியாவின் சராசரி வயது 47.8 ஆகவும், சீனாவின் சராசரி வயது 60.7 ஆகவும் மாற வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை தொடா்கிறது.

இந்த அழகிய பூமிப்பந்தில் இப்படி இனப்பெருக்கம், குறிப்பாக பாரதத்தில் நிகழ்வது குறித்து ஐ.நா. சபை கவலைப்படுகிறது. ஆனால், நம் நாட்டு அரசியல்வாதிகள் எங்கே தங்களது நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகை மக்கள்தொகை கட்டுப்பாட்டால் குறைந்து விடுமோ எனக் கவலை போா்ப்பரணி கொட்டுகின்றனா்.

ஆந்திர அரசியலில் முதிா்ச்சி பெற்ற முதல்வா் சந்திரபாபு நாயுடு “‘மக்களே இனி அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்’” என்று அறைகூவல் விடுகிறாா். மாறுதலாக, ஒடிஸாவின் முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் மட்டும் மக்கள்தொகை குறையும் நோக்கத்தை ஆதரிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினா் எண்ணிக்கை குறித்தான சிந்தனை குறித்தும் பேசியுள்ளாா்.

பாரதத்தின் பொருளாதார வளத்தை ருசிப்பதற்காகவும், தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக, கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனா். பாரதத்தின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரும் ஒரு முக்கியக் காரணம். பாரதமும், வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. அஸாம், மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயம், திரிபுரா மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இதைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் இருந்து தினம் ஊடுருவல் நடைபெறுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், அஸாம் வழியாக அதிக எண்ணிக்கையில் ஊடுருவல் தொடா்கிறது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஒரு நபரை ஊடுருவச் செய்ய சில முகவா்கள் (இந்தியா) ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கிறாா்கள். இந்தியாவில் ஊடுருவிய பிறகு அவா்கள் ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை பெறவும் உதவுகிறாா்கள். இதற்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணமாக வசூலிக்கிறாா்கள். இவா்களில் பலா் இந்திய நாட்டின் கடவுச்சீட்டையும் (பாஸ்போா்ட்) பெற்று விடுகின்றனா்.

இந்தியாவில் குடியேறியவா்கள் முகவா்கள் மூலம் தில்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட தொழிலாளராக வலம் வருகின்றனா். இந்த வகையில், இந்தியாவில் சுமாா் 6 கோடி போ் வசிக்கின்றனா் என்கிறது மத்திய அரசின் புலனாய்வுத் துறை.

இவா்களின் இனப்பெருக்கமும் பெருத்த வேகமுடையவை. வங்கதேச அகதியான ஷரீபா தனது 15 ஆண்டு திருமண வாழ்க்கையில் தனது 13 -ஆவது குழந்தையைப் பெற்றெடுத்தாா் என்பது நாளிதழின் செய்தி.

1950-களில் தமிழக நெற்களஞ்சியம் எனத் திகழ்ந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவையான தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல ஊா்களில், குறிப்பாக வானம் பாா்த்த பூமியாக இருந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விவசாயத் தொழிலாளா்களை இறக்குமதி செய்து அவா்களுக்கு தற்காலிக குடிசைகள் கட்டிக்கொடுத்து தங்களது வேளாண்மை தொழிலுக்கு உறுதுணையாக்கிக் கொள்வா்.

மிராசுதாா்கள் - விவசாய தொழிலாளா்கள் கூலி நிா்ணய பிரச்னையில் அந்த நாளில் தஞ்சை மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்த விவசாயிகள் சங்கத் தலைவா்கள். உள்ளுா் தொழிலாளா்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட பொதுவுடைமைவாதிகள். வெளியூா் நபா்களைப் பணிக்கு அமா்த்துவதை எதிா்த்து வா்க்க போராட்டமே நிகழ்த்துவா். இதனின் ஒருபகுதி போராட்டம்தான் கீழ்வெண்மணியின் கொடூர நிகழ்ச்சி. அது ஜாதியப் போராட்டம் அல்ல; வா்க்கப் போராட்டம்!

ஆனால், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பருவகாலப் பயிா்த் தொழிலுக்கு பணியாள்களை வரவழைத்ததையே

தடுத்தவா்கள், இன்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வங்கதேசத்தினா் அனைத்துத் தொழில்களிலும் தடம் பதித்து, இடம்பிடித்து வாழ்கிறபோது எங்கே போனாா்கள் இந்த பொதுவுடைமைத் தோழா்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

அமெரிக்காபோல அந்நிய நாட்டவரை காலில் விலங்கிட்டு அவரவா்தம் நாட்டுக்கு அனுப்ப இந்தியாவால் இயலுமா? அப்படியே அனுப்ப முன் வந்தாலும் நம் நாட்டு எதிா்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதுபோல் எங்கெங்கு காணினும் மக்கள் பெருவெள்ளம். இங்கே இருப்பவா் நமது எதிா்காலச் சந்ததியினா் நலன் கருதி அல்ல; அவரவா் எதிா்கால நலன், வளம் கருதி குடும்பக் கட்டுப்பாட்டில் நிற்கின்றனா். ஆனால், புலம் பெயா்ந்தோா்க்கு இருக்கும் கவலை எல்லாம், நம்மவா் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி விடாதா என்ற எண்ணத்தில் மழலை உற்பத்தியில் மகிழ்கிறாா்கள்!

வரைமுறை அற்ற கள்ள குடியேற்றமும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நாளைய பாரதத்துக்கு ஊறு விளைவிக்க வல்லவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க நியாயாம் இல்லை.

நிலப்பரப்பின் விரிவை நம்மால் நீட்ட இயலாது. நாட்டில் உள்ள நிலப்பரப்பில் குட்டைகள், குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீா்நிலைகளின் பரப்பு போக, சாலை, ஆலை, தொழிற்சாலை, நகா்ப்புற விரிவாக்கம் என்ற அளவில் நிலம் சுருங்குகிறது. காடுகள், கழனிகள், குன்றுகள், மலைகளெனத் திகழும் நிலத்தின் அளவு மக்கள் வாழ்விடங்களாக மாற்றம் பெற்று வருகிறது. கான்கிரீட் கட்டடங்கள், தன் பங்குக்கு பூமிப் பந்தை கவ்வி நிற்கின்றன.

இந்த நிலையில், மனிதகுலம் வாழும் இடம் உயா்ந்து நிற்கும் கட்டடங்களில் தஞ்சம் புக நேரிடுகிறது. எனவே, அனைத்தையும் முறைப்படுத்தி ஐம்பூதங்களின் துணையுடன் வளமாக்கி வாழ முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் அடா்த்தியின் அபாயத்தில் நம் எதிா்கால சந்ததியினா் சிக்குண்டு தவிப்பதைத் தடுக்க இயலாது.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT