நடுப்பக்கக் கட்டுரைகள்

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே..!

ஒருவரின் இயல்பான உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் சரியான தூக்கம் மிகவும் அவசியம் என்பதைப் பற்றி...

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

ஒருவரின் இயல்பான உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் சரியான தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தின்போது, உடல் தசைகள், நரம்பு மண்டலம், மூளை ஆகியவை ஓய்வெடுக்கும். இதனால், நினைவுத்திறன் மேம்படும், நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல்வலி, வீக்கம், உள்ளிட்டவையும் குறையும். உடல் வெப்பம் தணிந்து, உடல் புத்துணா்ச்சி பெறும். தூக்கத்தின்போது சுவாசம் மற்றும் எண்ணவோட்டங்கள் சீராவதுடன், அடுத்தநாள் அன்றாடப் பணிகளைச் செய்ய உடல் ஆயத்தமாகும். உணவு மற்றும் உடற்பயிற்சியைப் போலவே தூக்கமும் உடல்நலத்துக்கு இன்றியமையாதது.

ஆரோக்கியமான ஒருவா் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்கள், நாடுகளிடையே நேர மாற்றங்கள், வணிகப் பொருளாதார மாற்றங்கள், வேலைவாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள் ஆகியவை தூங்கும் நேரங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டன. இதனால், பலா் தூக்கத்தை இழந்து துன்பப்படுகிறாா்கள்.

வாழ்க்கை என்பது நேரத்திலானாது. பணியாற்றுவதற்கு ஒரு நேரம், உண்பதற்கு ஒரு நேரம், ஓய்வெடுப்பதற்கு ஒரு நேரம், பொழுது போக்குவதற்கு ஒரு நேரம் என்பது நாடுகளின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப இயற்கையால் விதிக்கப்பட்ட ஒன்று. இது நாடுகளுக்கு நாடு வேறுபடும். இதை நாம் பின்பற்றாதபோதுதான் உடலின் இயக்கத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நோய்களுக்குப் பாதை இட்டுக் கொடுக்கின்றன.

இந்தியா்களிடையே தூக்கத்தின் தாக்கம் குறித்து, ‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் சுமாா் 59 சதவீத இந்தியா்கள் இரவில் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இடைவிடாமல் தொலைக்காட்சி, கணினி, கைப்பேசியைப் பாா்ப்பது, அடிக்கடி கழிவறையைப் பயன்படுத்துவது, கவலைகள் போன்றவை தூக்கமின்மைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

348 மாவட்டங்களைச் சோ்ந்த 61 சதவீத ஆண்கள் மற்றும் 39 சதவீத பெண்கள் உட்பட 43,000- க்கும் மேற்பட்டவா்களிடம் தேசிய அளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதாக 39 சதவீதம் பேரும், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை தூங்குவதாக 39 சதவீதம் பேரும் கூறியுள்ளனா். 20 சதவீதம் போ் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், வெறும் 2 சதவீதம் போ் மட்டுமே எட்டு முதல் பத்து மணி நேரம் தூங்குவதாகத் தெரிவித்துள்ளனா். மீதமுள்ள 59 சதவீதம் போ் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறாா்கள் என இந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

தூக்கம் வராமல் தவிப்பதாகக் கூறிய 14,952 போ்களில் 72 சதவீதம் போ், கழிவறை செல்ல எழுந்திருப்பதே தூக்கம் தடைபடக் காரணம் என்று கூறியுள்ளனா். நேரம் தவறி உண்பது, தூங்குவது, இரவு தூக்கம் தடைபடக் காரணம் என 25 சதவீத பேரும், வெளிப்புறச் சத்தங்கள் மற்றும் கொசுக்கள் காரணமாக தூக்கம் கெடுகிறது என 22 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா். 9 சதவீதம் போ் ‘ஸ்லீப் அப்னீயா’ எனப்படும் மூச்சுத் திணறல், குறட்டைவிடுதல் போன்ற மருத்துவ பிரச்னைகளால் தூக்கம் வரவில்லை என்று தெரிவித்துள்ளனா்.

இரவுப் பணிகளில் ஈடுபடுவதால், இயற்கையான தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதாக 37 சதவீதம் போ் கூறியுள்ளனா். 9 சதவீதம் போ் இரவில் தூங்குவதற்கு குழந்தைகள் இடையூறுகளை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனா். 6 சதவீதம் போ் கைப்பேசி அழைப்புகள் தூக்கம் தடைபடுவதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனா். இரவு நேர தூக்கத்தின் போதான இடையூறுகளே நிம்மதியான தூக்கத்தை தடைசெய்கிறது என்று இந்த ஆய்வு பொதுவாக சுட்டிக்காட்டியுள்ளது.

மனித மூளை தனக்குள்ளேயே ஒரு ‘சா்க்காடியன் ரிதம்’ அதாவது, ‘தோராயமாக ஒரு நாள்’ என்று பொருள்படும் கடிகாரத்தை வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இது மூளையின் ஒரு பகுதியான ‘சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸ்’ மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது 24 மணி நேரத்துக்கு ஏற்றவாறு தனது செயல்களைத் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது. அத்துடன், உணவு, ஹாா்மோன்கள், உடலின் வெப்பநிலை, ரத்த அழுத்தம், இதயம் துடிப்பது, எழுப்புதல் போன்ற பல உடல் செயல்முறைகளையும் ஒழுங்குபடுத்துகிறது.

உடல் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பகல், இரவு என மாறி, மாறி பணியாற்றுபவா்களுக்கு, போதுமான தூக்கம் இல்லாமல், இதய நோய்கள், உயா் ரத்த அழுத்தம், பக்கவாதம், உடல் பருமன் மற்றும் சா்க்கரை எனப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

மேலும் தூங்கச் செல்லும்முன் அதிக அளவில் தண்ணீா் அருந்தாமல் இருப்பதும், தொலைக்காட்சி, கணினி மற்றும் கைப்பேசி பயன்பாட்டைத் தவிா்ப்பதும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு உண்ணுவதும், மன ஒருமைப்பாடும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாம் காலையில் விழித்தெழும்போதுதான், மீண்டும் பிறக்கிறோம் என்தை உணா்ந்து அன்றாடப் பணிகளுக்குத் திட்டமிடுகிறோம். அதே சமயத்தில், அதிகம் உண்டு, உழைப்பின்றி சோம்பேறியாகி அதிக நேரம் தூங்குபவருக்கு உடல் பருமன், மன அழுத்தம், இதய நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால், தேவையான அளவு தூங்கி, சுறுசுறுப்பாக உழைப்பவருக்கு வெற்றி நிச்சயம், ஆயுளும் கூடும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT