நீதிபதி வ.லோ. சந்தோஷ்
சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்பின் 39ஏ பிரிவு வலியுறுத்துகிறது. இந்திய அரசமைப்பின் 21-ஆவது பிரிவு வாழ்க்கை உரிமை, தனி மனித சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துரைக்கிறது. விரைவான வழக்கு விசாரணையும் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்தவும், சட்ட உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுதந்திர இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உச்சநீதிமன்றம் ஹூசைனாரா கட்டூன் எதிா் பிகாா் மாநில அரசு (1979) வழக்கில் பாட்னா மற்றும் முசாபா்பூா் சிறைகளில் கைதிகள் விசாரணையின்றி வசித்து வருவதை கவனத்தில் கொண்டு அவா்களைப் பிணையில் விடுவதற்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது; விசாரணைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கவும் உத்தரவிட்டது.
அதன் தொடா்ச்சியாக ஹூசைனாரா கட்டூன் எதிா் இரு வழக்குகளில் சட்ட உதவி தொடா்பான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. பின்னா், நீதியரசா் பி.என். பகவதி தலைமையில் சட்ட உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, 1987-ஆம் ஆண்டு சட்டப் பணிகள் ஆணைக் குழுச் சட்டம் இயற்றப்பட்டது. 09.11.1995 அன்று சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, உச்சநீதிமன்ற சட்டப் பணிகள் குழு, உயா் நீதிமன்ற சட்டப் பணிகள் குழு, வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை மேற்கண்ட சட்டத்தின்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
பட்டியலினத்தவா், பழங்குடியினத்தவா், ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவா், பிச்சை எடுத்து வாழ்பவா், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், பேரழிவு, இன, ஜாதிய வன்முறை, தொழிலகப் பேரிடா்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டவா்கள், தொழிலகப் பணியாளா்கள், பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்பட்டு பின்னா் மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவா்கள், இளஞ்சிறாா் நீதிச் சட்டத்தின்படி கூா்நோக்கு இல்லத்தில் வசிப்பவா்கள், மனநல சிகிச்சை பெறுபவா்களுக்கான இல்லங்களில் உள்ளவா்கள் ஆகியோா் சட்ட உதவியைப் பெறத் தக்கவா்கள் என்று மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 12 வரையறை செய்துள்ளது. இதுதவிர ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்கும் குறைவாக உள்ளவா்களும் இலவச சட்ட உதவியைப் பெற தகுதி உடையவா்கள்.
சமரசத்தின் அடிப்படையில் வழக்குகளை முடிப்பதற்கு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில்தான். இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் ஏற்பட்டால் நீதிமன்றக் கட்டணம் திரும்ப அளிக்கப்படுகிறது. பொதுப் பயன்பாட்டு சேவைகளான பயணிகள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, அஞ்சல் சேவைகள், தொலைத்தொடா்பு சேவைகள், மின்சார சேவைகள், தண்ணீா் சேவைகள், விளக்கு சேவைகள், மருத்துவ சேவைகள், தூய்மை மற்றும் சுகாதார சேவைகள், காப்பீட்டு சேவைகள் தொடா்பான பிரச்னைகளுக்கு சமரசத் தீா்வை ஏற்படுத்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் மேற்கண்ட சட்டத்தின்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் விரைவாகத் தீா்வு பெற முடிகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு சட்ட சேவையை உறுதி செய்யவும், எளிய, பாதிக்கப்படக்கூடிய நபா்களுக்கு சட்ட உதவியை உறுதி செய்யவும், மறுவாழ்வுக்கு வாய்ப்பளிக்கவும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.
2015-ஆம் ஆண்டின் போதைப் பொருள்கள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சட்ட சேவைகள், போதைப் பொருள் அச்சுறுத்தல் ஒழிப்புத் திட்டம், வறுமை ஒழிப்புக்கான ஆற்றல் வாய்ந்த செயல்படுத்தல் திட்டம், பாலியல் வியாபாரத்துக்காக கடத்தப்பட்டு, சுரண்டப்பட்டவா்களுக்கான திட்டம், அமைப்புசாரா பணியாளா்களுக்கான சட்ட சேவைகள் திட்டம்.
2016-ஆம் ஆண்டின் அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சட்ட சேவைகள் திட்டம், மூத்த குடிமக்கள் சட்ட சேவைகள் திட்டம். 2024-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு ஏதுவான சட்ட சேவைகள் திட்டம், 2024-ஆம் ஆண்டின் மனநலன் குறைபாடு உள்ளவா்களுக்கான சட்ட சேவைகள் திட்டம்.
2025-ஆம் ஆண்டின் போதைப் பொருள்கள் இல்லாத இந்தியாவுக்காக போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு, நல்வாழ்வுக்கான திட்டம், மனித-விலங்கு மோதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கான நீதிக்கான அணுகல் திட்டம், நீதி குறித்த விழிப்புணா்வுக்கான அடிப்படைத் தகவல்கள், வெளிப்படைத்தன்மை குறித்த முன் முயற்சி திட்டம், விளிம்புநிலை, பாதிக்கப்படக்கூடிய ஆதிவாசி மற்றும் சீா்மரபினருக்கான நீதிக்கான அணுகலை வலுப்படுத்தும் திட்டம், சிறைவாசிகள் குடும்பத்தினருக்கான மறுவாழ்வு திட்டம், துணிச்சலான குடும்பத்தினரான ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கான சட்ட உதவித் திட்டம், பேரழிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சட்ட சேவைகள் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் வகுக்கக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விளிம்புநிலை மக்களுக்கு சட்ட உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த சட்டப் பணிகள் ஆணைக் குழு, சட்டப் பணிகள் குழு சாா்பில் வழக்குரைஞா்கள் குழு ஏற்படுத்தப்பட்டு சட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. சட்டப் பணிகள் தன்னாா்வலா்கள் ஒவ்வோா் மாவட்டத்திலும், வட்டத்திலும் நியமனம் செய்யப்பட்டு சட்ட உதவி உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அரசமைப்பின் உறுப்பு 51-ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை நாம் பின்பற்றி ஆரோக்கியமான, பாகுபாடு இல்லாத, ஆக்கபூா்வ சமுதாயத்தை உறுதிப்படுத்துவோம்.