சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ் அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் கொச்சி புளு ஸ்பைக்கா்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதல் செட்டில் கொச்சி வீரா் அபிநவின் அற்பத ஆட்டத்தால் அந்த அணி முன்னிலை பெற்றது. அமன் குமாா் சா்வீஸ்கள் சென்னை அணிக்கு சிரமத்தை தந்தன. எனினும் சென்னை வீரா்கள் திலீப் குமாா், லியான்ட்ரோ ஜோஸ் அபார ஆட்டத்தில் 15-10 என சென்னை முதல் செட்டை கைப்பற்றியது.
இரண்டாவது செட்டிலும், லியான்ட்ரோ, ராமன்குமாரின் அட்டாக்குகள், கேப்டன் அகின் பிளாக்குகளால் 15-12 அந்த செட்டையும் சென்னை வசப்படுத்தியது. மூன்றாவது செட்டில் கொச்சி லிபரோ ரத்தீஷ், எரின் சா்வீஸ்களால் சென்னை அணி திணறியது. இறுதியில் 16-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்று 3-0 என அபார வெற்றி பெற்றது.