கிறிஸ்துமஸ்

உலகறியும் கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியா திருத்தலம்

என். கணேஷ்சங்கர்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், உப்பிலியுபுரம் ஒன்றியத்தில் இருக்கும் கோட்டப்பாளையம் கிராமத்தை உலகம் அறிகிறது என்றால் இங்குள்ள கிறிஸ்துவ தேவாலயமும் தேர்த் திருவிழாவும் இவற்றுடன் இணைந்த பள்ளிகளும்தான் முக்கிய காரணங்கள். கோட்டப்பாளையத்தின் அடையாளங்கள் இவை.

இங்கு 16 ஆம் நூற்றாண்டு இறுதியில் சிறிய ஆலயமாக தொடங்கப்பட்ட கிறிஸ்துவ திருத்தலம் புனிதை மகதலா மரியா என்ற பெயரில் 300 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இந்தத் திருத்தலம் துறையூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் மிகப் பழமையானது என்றும், முதல் தலம் என்றும் சிறப்பைப் பெற்றுள்ளது. துறையூர் பகுதிக்கே தொன்மையான தேவலாயம் என்ற மாத்திரத்தில் அதன் வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் யாவருக்கும் வருவது இயல்பே. 

திருத்தல மூலஸ்தானத்தில் உள்ள யேசுவின் சிலை மற்றும் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட மேரி சிலைகள்

இங்கு கிறிஸ்துமஸ் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஆலன்பால் கூறுகிறார்:

இவ்வாலயம் 300 வருடங்கள் பழமையானது என்றும், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் கிறிஸ்துவ மதம் தழுவி முதலில் சேப்பல் என்றழைக்கப் பெறும் சிறிய தேவாலயத்தை எழுப்பியதாகவும், தற்போது இது பாரிஸ் என்றழைக்கப் பெறும் நடுத்தரமான திருத்தலம் என்றும், இதற்கடுத்தது என்றால் பசலிக்கா என்றழைக்கப் பெறும் பேராலயம் (உதாரணம் வேளாங்கண்ணி) என்றார்.

கிறிஸ்துவ மதத்தில் சேப்பல், பாரி்ஸ், பசலிக்கா எனத்  திருத்தலங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியை திருத்தலம் கோபுரமும் கொடிமரமும்.

மேலும், வீரமாமுனிவர் காலத்தில் இந்தத் திருத்தலம் புனரமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

கேரளத்தில் பாலக்கோடு அருகே அத்திநகரில் வசித்தவரும், இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்ட, கர்ண பரம்பரையாக இந்தக் கோயில் வரலாற்றைத் தன் தந்தை வழியாகத் தெரிந்து கொண்ட, 1917ம் ஆண்டு  
இந்த தேவாலயத்தினுடன் இணைந்த ஆர்சி பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியராக பொறுப்பு வகித்தவருமான பொன்னுசாமி நாயுடு என்பவர் பல்வேறு தகவல்களைத் திரட்டி, தனது முயற்சியால் இக்கோயில் குறித்த வரலாற்றை தொகுத்துப் பொதுநலம் என்ற பெயரில் சென்னையில் வெளியான பத்திரிகையில் முதலில் வெளியிட்டார்.

ஜூலை மாதம் தேர்த் திருவிழாவின் போது மதங்களைக் கடந்து திரண்ட மக்கள் கூட்டம்

இதனைப் புத்தகமாக வெளியிட விரும்பிய இவர், அதற்குரிய உபயதாரருக்கு காத்திருந்தார். 1928-ம் ஆண்டு புதுவையிலிருந்து கோட்டப்பாளையம் சென்ற ஸ்ரீமான் தர்மராஜ் கொண்டப்பா செட்டியார் என்றழைக்கப் பெற்ற சவியே தே கொண்டப்பாவின் உதவியுடன் 1929ம் ஆண்டு புதுவை ஆனந்தா அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட அர்ச். மரிய மதலையம்மாள் திருவரலாறும், கெளரிக் குலாதிபக் கம்பால் நாயுடு குடும்ப வரலாறும் என்ற தலைப்பிலான புத்தகத்தை பொன்னுசாமி நாயுடு வெளியிட்டுள்ளார்.

புத்தகத்தின் சுருக்கம்

திருமலை நாயக்கர் இறப்புக்குப் பிறகு 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரை சமஸ்தானத்தின் அரசருடன் இணக்கமாக இருந்த ரத்தின வியாபாரி பெருந் தனவந்தர் கம்பால் நாயுடு, மன்னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுரையைத் துறந்து  தனது குடும்பத்தினருடன்  திருச்சி சென்று அரசருக்கு அஞ்சி மறைந்திருந்தார். பின்னர் அவர் திருச்சியிலிருந்து உப்பிலியபுரம் சென்று சில காலம் தங்கி விட்டு அங்கிருந்து தளுகையாறுக்கும் மேற்கே இருந்த காட்டை திருத்தி குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அதன் பின்னர் அந்தப் பகுதிக்கு வேறு சிலரும் சென்று தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாளில் வந்த கொள்ளை நோய் காரணமாக கம்பால் நாயுடு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். சேலத்திலிருந்து வழிப்போக்கராக சென்ற ஒரு கிறிஸ்துவ பெண்மணி கோட்டப்பாளையம் சென்று கம்பால் நாயுடு குடும்பத்தினரை கொள்ளை நோயிலிருந்து மீட்டுள்ளார். அப்பெண்மணி வழியாக கிறிஸ்துவ மதம் தொடர்பாக தான் கேள்விபட்டிருந்ததை விட கூடுதலாக அறிந்து கொண்ட கம்பால் நாயுடு தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அந்த பெண்மணியுடன் வடுகர்பேட்டை சென்று அங்கிருந்த குருமாரால் கிறிஸ்துவ மதம் தழுவியுள்ளார்.

அதன் பின்னர் கோட்டப்பாளையம் சென்று வழக்கம் போல் வியாபாரம் செய்து வந்த போது சில மனக் கஷ்டங்கள் அடைந்த கம்பால் நாயுடுவின் கனவில் கிரீடம் தரித்த பெண் ஒருவர் பிரகாசமாக தோன்றி தற்போதைய இருப்பிடத்தை விட்டு அருகிலுள்ள விறலிக்காட்டுக்கு செல்லுமாறும், அங்கு சிலுவை தோன்றுமிடத்தில் தனக்கு கோயிலெழுப்பி அதனருகே வசிக்குமாறும் கனவில் தோன்றிய பெண்மணி கூறியுள்ளார். இதுகுறித்து வழிப்போக்கராக வந்த பெண்மணியிடம் கம்பால் நாயுடு ஆலோசனைக் கேட்டபோது அவர் கனவில் வந்த பெண் ஏசுவின் கொள்கைகளை பின்பற்றிய அவரது பெண் சீடர் அர்ச் மரிய மதலேனம்மாள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மறுநாளே சிலுவையைத் தேடி விறலிக்காட்டுக்கு சென்ற கம்பால் நாயுடு கரையானால் அரிக்கப்பட்ட மரக்குருசை (சிலுவையை) கண்டுள்ளார். அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் விறலிக்காட்டைத் திருத்தி அர்ச் மரிய மதலேனம்மாளுக்கு சிறிய கோயில் எழுப்பினார். அந்தக் கோயில்தான் தற்போதுள்ள கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியா திருத்தலமாக விளங்கப் பெற்றுள்ளது.

தற்போது அங்கு அருள்தந்தையாக உள்ள அகஸ்டின் கூறும்போது, மரியா ஏசுவின் நம்பிக்கைக்குரிய சீடராக இருந்தார். ஏசு உயிர் நீத்து 3ம் நாள் உயிர்தெழும் போது மரியாவுக்குத் தான் முதலில் காட்சிக் கொடுத்தார். அவர் பெயரில் உள்ள இந்த திருத்தலத்தில் அவர் நினைவாக  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 10 நாள்கள் தேர்த் திருவிழா பெரும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்தின் மகிமையை அறிந்த பலரும் மதம் கடந்தும் வழிபாடு செய்கின்றனர். குறிப்பாக இங்கு தேர்த் திருவிழாவில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர் என்றார்.

1929 திருத்தியமைக்கப்பட்டதற்கு சான்றாக உள்ள  கருவறை மரக் கதவில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்

வீரமாமுனிவர் குறித்துக் கேட்டபோது, அவர் வடுகர்பேட்டையில் தங்கி இந்த திருத்தல வளர்ச்சிக்கு உதவியதாக தெரிகிறது என்றார் அருள்தந்தை அகஸ்டின். 16ம் நூற்றாண்டு இறுதியில் எளிமையாக தொடங்கப்பட்ட இந்த தேவாலயம் 17 ம் நூற்றாண்டு மத்தியில் அருள்தந்தை சவேரியாராலும் சிறு தேவாலயம் கட்டும் பணி தொடக்கப்பட்டு, 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் (தைரியநாத சுவாமி, கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி) வடுகர்பேட்டையில் தங்கியிருந்தபோது அவர் வழிகாட்டலிலும் தேவாலயப் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த திருத்தலத்தில் கருவறையின் பின்புறமுள்ள மரக் கதவு நிலையில் 22.7.1929ம் ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த சேவியர் டி கொண்டப்பாவால் மாற்றியமைக்கப்பட்டதாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் 16ம் நூற்றாண்டின் இறுதியில் சிறிய தேவாலயமாக தொடங்கி தற்போது வரை மதங்களைக் கடந்து மனங்களை ஆட்கொண்டிருக்கும் இந்த தேவாலயம், கிறிஸ்துவர்களுக்கும், கோட்டப்பாளையம் மக்களுக்கும் மட்டுமின்றித் துறையூர் பகுதிக்கும் அடையாளமாக உள்ளது என்றால் மிகையல்ல.

திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள துறையூரிலிருந்து   இங்கிருந்து 24 கி.மீ. தொலைவு சென்றால் கோட்டப்பாளையம். துறையூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்லுகின்றன.  உப்பிலியபுரத்திலிருந்து மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வானுயர கோபுரமாக வளர்ந்து நிற்கும் கோட்டப்பாளையம் புனிதை மகதலா மரியை திருத்தலம், ஆர்சி நடுநிலைப் பள்ளி, புனித மேரி தொடக்கப் பள்ளி, புனித லூர்து அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளிகளை அந்தப் பகுதியில் நிறுவி அதன் வாயிலாக பலரது அறிவுக் கண்ணைத் திறந்து தன் சேவையால் மக்கள் மனங்களிலும் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT