சினிமா

மோசடி: நடிகை லீனா மரியா பால் காதலர் சிறையில் அடைப்பு

தினமணி

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பாலின் காதலர் சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர் ரெட்டி புழல் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
 கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர் ரெட்டி என்ற பாலாஜி. இவர், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் பல குரலில் பேசி மோசடி செய்து வந்தார். மலையாள நடிகை லீனா மரியா பாலுடன் நெருங்கி பழகிய சுகாஷ், அவரைக் காதலித்து வந்தார். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட லீனா, சுகாஷின் மோசடிகளுக்கு உடந்தையாக செயல்பட ஆரம்பித்தார்.
 இவர்கள் இருவரும் சேர்ந்து அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.19.22 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல சேலையூரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் மொத்தமாக சீருடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருவரும் கர்நாடக அரசு ஊழியர்களுக்கு சீருடை தைக்க ஆர்டர் தருவதாகவும், டெபாசிட்டாக ரூ.72.47 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றினர்.
 இந்த மோசடி குறித்தும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இருவரும் வங்கியில் மோசடி செய்ததில், அந்த வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 இந்த நிலையில், கடந்த மே 27-ம் தேதி தில்லி அருகே உள்ள பங்களாவில் மரியா பாலை போலீஸார் கைது செய்தனர். சந்திரசேகர் தப்பியோடிவிட்டார். இதற்கிடையே தில்லியிலும் சந்திரசேகர் மோசடி செய்ததால், தில்லி போலீஸாரும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, தேடி வந்தனர்.
 இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் கங்கர் பிதா என்ற இடத்தில் பதுங்கியிருந்த சந்திரசேகரை போலீஸார் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரசேகரை, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை சிறையில் காட்டி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், சந்திரசேகரை அங்கு திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் ரயில் மூலம் சென்னைக்கு புதன்கிழமை காலை அழைத்து வந்தனர்.
 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் தாம்பரம் நீதித் துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சந்திரசேகர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 கைது செய்யப்பட்ட சந்திரசேகர் மீது தமிழகத்தில் 6 மோசடி வழக்குகளும், கர்நாடகத்தில் 8 மோசடி வழக்குகளும், கேரளம், தில்லியில் தலா ஒரு வழக்கும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT