விஷ்ணுவர்தனிடம் ஏன் கதை கேட்பதில்லை? நடிகர் ஆர்யா சுவாரசிய பதில்!
என்னை வைத்து யூடிவியில் பலபடங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள்.
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்து விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம் 'யட்சன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியதாவது:
இது 'ஆரம்பம்' படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்தவிகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன. கம்போசிங், பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய் சிரமப்படவில்லை. தி.நகரிலுள்ள ஒரு ரூமில்தான் பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.
ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ. அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்று மட்டும் என்னிடம் கேட்பார். அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார். நான் எப்போது படம் தொடங்கினாலும், உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார் என் அம்மா. அவருக்கு ஏற்றமாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன்.
Advertisement
என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரியபலமாக தொடர்பவர் யுவன். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கென்று தனியாகப் பாடல்கள் கொடுக்கவேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது என்றார்.
விழாவில் ஆர்யா பேசும்போது:
என்னை வைத்து யூடிவியில் பலபடங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும். எனவே நான் கதை கேட்பதில்லை.
நான் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளேன். என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை என்கிற அளவுக்கு என்னுடைய பல படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். என் சினிமா பயணம் 'தீப்பிடிக்க' பாடலில் இருந்து தொடங்கியது. 'தீப்பிடிக்க' பாடலில் நடித்த பையன் என்கிற அடையாளம் கிடைத்தது. அது இன்னும் தொடர்வதற்குக் காரணம் யுவன் என்றார்.